சடலங்களை எரியூட்டுவதில் தனியாருக்கு அதீத லாபம் ; திருச்சி மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் 

Jun 25, 2026 - 16:16
 0  77
சடலங்களை எரியூட்டுவதில் தனியாருக்கு அதீத லாபம் ; திருச்சி மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் 

சடலங்களை எரியூட்டுவதில் தனியாருக்கு அதீத லாபம் ; திருச்சி மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் 

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் ஒட்டுமொத்தப் பயணமும் வணிகமயமாகி வரும் சூழலில், திருச்சியின் பழமைவாய்ந்த ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

திருச்சி காவிரி ஆற்றங்கரையின் தென்புறத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஓடத்துறை பகுதியில் திருச்சி மாநகராட்சிக்குச் சொந்தமான ஓயாமரி நவீன தகன மையம் அமைந்துள்ளது. மாநகராட்சியின் முதலாம் மண்டலத்திற்கு உட்பட்ட இந்த நவீன எரிவாயு தகன மயானத்தின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை, கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மையத்தை, தனியார் லாபம் ஈட்டுவதற்காகத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, மாநகராட்சி கஜானாவை ஓட்டையாக்குவது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திருச்சி மாநகராட்சி, கடந்த 15.06.2026 முதல் ஓராண்டு காலத்திற்கு ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தில் பிரேதங்களை தகனம் செய்வது மற்றும் பராமரிப்பு பணிகளை கோவையைச் சேர்ந்த “ஈஷா பவுண்டேஷன் காயநத்ஸ்தானம்” என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளோடும், இறந்தவர்களுக்கு செலுத்தப்படும் இறுதி மரியாதையோடும் தொடர்புடைய இத்தகைய முக்கியமான பொதுச்சேவையை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி, ஒரு பிரேதத்தை தகனம் செய்வதற்காக ரூ.2,500 கட்டணமாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் ரூ.100 மட்டுமே மாநகராட்சிக்கு செலுத்தப்பட உள்ளதாகவும், மீதமுள்ள தொகையை தனியார் நிறுவனமே வைத்துக்கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு பெரும் வருமான இழப்பும் ஏற்ப்பட்டுள்ளது.

இது பொதுச்சேவையை லாப நோக்கமிக்க வணிக நடவடிக்கையாக மாற்றும் அபாயத்தை உருவாக்குகிறது. குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் கூடுதல் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும்.

ஏற்கனவே கடந்த காலத்தில் கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடையின் பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தபோது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய அஸ்திகள் முறையாக வழங்கப்படாததும், எரிவாயு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரேதங்களை ஒரே நேரத்தில் தகனம் செய்ததும் போன்ற மனிதநேயமற்ற செயல்பாடுகள் அப்போது வெளிச்சத்திற்கு வந்தன.

இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக, தனியார் நிறுவனங்களிடமிருந்து அந்த பொறுப்புகள் மீட்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக தகன மேடைகளை பராமரித்து வந்தது. இதன் மூலம் மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டு, இடுகாடு சேவைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன.

இத்தகைய கசப்பான அனுபவங்கள் இருந்தும் மீண்டும் அதே தவறை மாநகராட்சி நிர்வாகம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இது பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மரியாதை மற்றும் கண்ணியம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

பொதுச்சேவை என்பது லாப நோக்கத்திற்காக நடத்தப்பட வேண்டிய துறை அல்ல. குறிப்பாக, மருத்துவம், குடிநீர், சுகாதாரம், இடுகாடு மற்றும் சுடுகாடு போன்ற அத்தியாவசிய சேவைகள் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நேரடி பொறுப்பிலேயே இருக்க வேண்டும். 

இந்த பொறுப்புகளை தனியாருக்கு தாரைவார்ப்பது சமூக நீதி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

எனவே, ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தை தனியாருக்கு தாரைவார்த்து வழங்கியுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, தகனம் மற்றும் பராமரிப்பு பணிகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். 

மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியத்தை உறுதி செய்து, மக்களுக்கு தரமான மற்றும் நம்பகமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ஓயாமரி இடுகாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பா.லெனின் மற்றும் வி. சந்தானம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0