மத்திய நீர் வள ஆணைய தலைவர் அனுபம்பிரசாத் டெல்டாவை பார்வையிட நேரில் வருகை- பிஆர்.பாண்டியன் 

Jun 24, 2026 - 12:18
 0  29
மத்திய நீர் வள ஆணைய தலைவர் அனுபம்பிரசாத் டெல்டாவை பார்வையிட நேரில் வருகை- பிஆர்.பாண்டியன் 

மத்திய நீர் வள ஆணைய தலைவர் அனுபம்பிரசாத் டெல்டாவை பார்வையிட நேரில் வருகை- பிஆர்.பாண்டியன் 

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம்பிரசாத், உறுப்பினர் செயலரும், மேகதாட்டு திட்டத்தின் பொறுப்பு அதிகாரியுமானயோகேஷ்பாட்டன்கர் ஆகியோரை நேற்று டெல்லி சேவா பவனில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பி. ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது; 

கர்நாடகம் உபரி நீரை மட்டுமே விடிவித்து வருகிறது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது. இந்நிலையில் உபரி நீரையும் தடுத்து காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை சட்டவிரோதமாக கர்நாடகா கட்ட முயற்சிக்கிறது. 

முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 2021 இல் மத்திய நீர்வள ஆணையத்தில் கொடுத்த வரைவு திட்ட அறிக்கையை எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தீர்கள்.

காவிரி மேலாண்மை ஆணையம் திட்ட அறிக்கையை விவாதிக்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது.தற்போது முதலமைச்சராக உள்ள டி கே சிவகுமார் சட்டவிரோதமாக மேகதாட்டு அணைக்கு அனுமதி கோரி சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய நீர் வள ஆணையமும் மறைவு திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 

கர்நாடக விவசாயிகள் மேகதாட்டு அணை கட்டுமானத்தை எதிர்த்து வருகிறார்கள். காரணம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே ஆயிரம் மீட்டர் ஆழத்தில் மேகதாட்டு கட்டப்பட்டால் கிருஷ்ணராஜ சாகரில் பற்றாக்குறை காலத்தில் தண்ணீர் தேக்குவதை கைவிட்டு,குடிநீர் என்கிற பெயரில் மேகதாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்.எனவே மேகதாட்டு அணை கர்நாடகத்திற்கு தேவையில்லை என விவசாயிகள் ஒருமனதாக தீர்மானித்துள்ளார்கள். 

மேலும், பெங்களூரில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் தருவதற்காக கர்நாடக தமிழக விவசாயத்தை அழிப்பதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது என்பதை வலியுறுத்தினோம். 

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகளோ நீர்த்தேக்கங்களையோ கர்நாடகா கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது.அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது என்பதையும் உத்தரவிட்டுள்ளது.

எனவே சட்டவிரோதமாக மேகதாட்டு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தினோம். மேலும், தமிழக காவிரி டெல்டாவில் நடப்பாண்டு (2026) குறுவைக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் மிகப்பெரிய இழப்பை டெல்டா விவசாயிகள் சந்தித்திருக்கிறோம். எதிர்காலத்தில் சம்பாவிற்கும் தண்ணீர் கிடைக்குமா? கிடைக்காதா ? என்கிற சந்தேகத்தில் உள்ளோம்.

கர்நாடக தமிழக விவசாயிகள் ராசிமணலில் தமிழகம் அணைக்கட்டிக் கொண்டால், வலது கரை கர்நாடகாவிற்குசொந்தம் என்பதால் தேவையான குடிநீரை கர்நாடகம் எடுத்துக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில் 2024ல் இரு மாநில விவசாயிகளும் மைசூரில் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுத்துள்ளோம் என்பதை எடுத்துரைத்தோம். 

காவிரி டெல்டாவில் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்திற்கான அனுமதியை 6ஆண்டு காலம் மத்திய அரசு அனுமதி வழங்காததால் கடல் நீர் உட்ப்புகுவதை தடுக்க முடியவில்லை என்பதையும் எடுத்துரைத்தோம். 

இது குறித்து பதில் அளித்த அனுபவம்பிரசாத் மற்றும் யோகேஷ்பாட்டன்கர் இருவரும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். ராசிமணல் அணை குறித்து தமிழக அரசு இதுவரையிலும் கோரிக்கை வைக்கவில்லையே? என வினவினர்.

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு உரிய தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ளதாக கர்நாடகம் தெரிவித்ததாகவும் தற்போது குருவை சாகுபடி மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கிறீர்கள் என்றனர்.

மேலும், விரைவில் கர்நாடகாவையும் தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவையும், அணைகளையும் நேரில் பார்வையிட வருகிறோம். அது குறித்து உங்களுக்கு உரிய முறையில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும், வெண்ணாறு கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அனுமதி தர தயாராக உள்ளோம். ஆனால், இத்திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வழங்கியது முதல் இன்று வரை இருக்கிற பிரச்சனைகளை மிக விரிவாக கேட்டறிந்தனர். விரிவான கடிதமும் அளித்தோம். இக்சந்திப்பு தமிழகத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்தது.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார், மற்றும் ஆணைய உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்து விரிவாக எடுத்துரைத்தோம் என்றார்.

இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி பாலசிவபிரசாத், தொட்டியம் சஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0