திருச்சியில் நாளை முதல்வர் விஜய்: போக்குவரத்து மாற்றம்
திருச்சியில் நாளை முதல்வர் விஜய்: போக்குவரத்து மாற்றம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் தமது முதல் பிரச்சாரத்தை துவக்கி, பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றார்.
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
இந்தச் சூழலில், தனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் தமது முதல் அரசு முறை பயணமாக நாளை மாலை திருச்சி வருகிறார்.
நாளை ஜூன் 1-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கியூ ஆர் கோட் கொண்ட 5000-ம் நபர்களுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் விஐபி பாதுகாப்பை உறுதி செய்யவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை ட்ரோன்கள் (Drones) அல்லது இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுவதற்கு மாவட்ட ஆட்சியர் கடுமையான தடை விதித்துள்ளார்.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நாளை காலை முதல் அமலுக்கு வரும் இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு திருச்சி மாநகரக் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.
பேருந்துகள் மாற்று வழிப்பாதை:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.06.2026 அன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 10.00 மணி முதல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மரக்கடை வழியாக மெயின்கார்டுகேட் காந்தி சிலை அருகே பயணிகளை இறக்கி விட்டு கீழ் அரண்சாலை வழியாக செல்ல வேண்டும். திருவெறும்பூரிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலையில் இறங்கி விட்டு திரும்பி செல்ல வேண்டும். கரூர் சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கே.டி சந்திப்பு, சாஸ்திரி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலூர், பொம்மபாடி, அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள் திருவானைக்கோவில் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கோணலூர் மதுரை சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து மாவட்டத்தின் எந்த பகுதிகளில் இருந்தும் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.
மேலும், காலை 07.00 மணி முதல் மதுரையில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி வழியாகவும், திண்டுக்கலிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையில் இருந்து குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகவும், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
கரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தமிழக முதல்வர் விஜய் திருச்சி வருவதை முன்னிட்டு இதுவரை திருச்சி மாநகரம் காணாத போக்குவரத்து மாற்றத்தை கண்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0