திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் பழமை மாறாமல் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருச்சி விமான நிலைய ஓடுதளத்தில் பழமை மாறாமல் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருச்சி கொட்டப்பட்டு விமான நிலைய ரன்வே சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபச்சை நாச்சியம்மன், ஸ்ரீபிறாயடி கருப்பு சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளப் பாதையில் மரத்தேரில் அம்மன் எழுந்தருள, டிராக்டரில் அம்மனை, வைத்து பக்தர்கள் "ஓம் சக்தி", "பராசக்தி" என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு விமானம் செல்லும் ஓடுபாதையில் கொண்டு சென்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர் ஊர்மக்கள் .
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கிராமிய வழிபாட்டு நிகழ்வில், செம்பட்டு, புதுத்தெரு, ரன்வே நகர் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த தேர்திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களில் ஆதார் அட்டையின் நகலை கையில் வைத்திருந்த 600-க்கும் மேற்பட்ட பக்தர்களை மட்டும், விமான நிலைய ஓடுபாதை பகுதிக்குள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனுமதித்தனர். கடந்த காலங்களில் தொன்றுதொட்டு அம்மன் தேரோட்டம் நடைபெறும் இந்த பகுதி, விமான நிலைய விரிவாக்கத்தினால் தற்போது திருச்சி விமான நிலையத்தில் விமான ஓடுபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
எனினும், பழமை மாறாமல் தேரோட்டத்தை நடத்த விமான நிலைய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேரோட்டம் விமான நிலைய ரன்வேயில் நடத்தப்படுகிறது.
இந்த தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மாநகர காவல் துறையினர், திருச்சி விமான நிலைய ஊழியர்கள், மத்திய பாதுகாப்பு படையினர் என 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு விமான நிலைய ஓடுபாதையில் பச்சை நாச்சியம்மன் தேரோட்டம் பழமை மாறாமல் நடைபெறுவதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முறைப்படி காப்புக் கட்டப்பட்டு தொடங்கிய இக்கோவில் விழாவில், பச்சைநாச்சியம்மன் மற்றும் காளியம்மன் ஆகியோர் சிம்ம வாகனம், அன்ன வாகனம் போன்றவற்றில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா அழைத்து வரப்பட்டனர்.
தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல், அலகு குத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல், பால்குடம் சுமத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கலிட்டு அம்மனுக்குச் சிறப்புப் படையல் இடுதல் எனப் பல வழிபாட்டுகளுடன் இக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி உறுப்பினர்களுடன், ரன்வே நகர் குடியிருப்பு வாசிகளும் செய்திருந்தனர்.
முன்னதாக, நடைபெற்று முடிந்த சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது பச்சை நாச்சி அம்மன் கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0