தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதற்கிடையே சி.வி.சண்முகமும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தமிழக வெற்றிக்கழகத்தில் நேற்று இரவு தன்னை இணைத்துக் கொண்டார். தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் தனது மகன் ஜவகர் மற்றும் ஆதரவாளர்களுடன் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ச்சியாக அதிமுகவில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் இழுத்துச் செல்லப்படுவது குதிரை பேர அரசியலுக்கு உதாரணமாக உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, 2016-2021 அதிமுக ஆட்சியின்போது சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டபோது அவரது ஆதரவாளராக செயல்பட்ட வெல்லமண்டி நடராஜன், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார். அப்போது அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0