ரூ.1,020 கோடி ஊழல் புகார்; கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: அண்ணாமலை வரவேற்பு

Feb 20, 2026 - 14:05
 0  90
ரூ.1,020 கோடி ஊழல் புகார்; கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: அண்ணாமலை வரவேற்பு

ரூ.1,020 கோடி ஊழல் புகார்; கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: அண்ணாமலை வரவேற்பு

அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ. 1,020 கோடி ஊழல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவுக்கு எதிராக நிலவி வரும் ஊழல் புகார்கள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் இன்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் 1,020 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு மீதான இந்த ஊழல் புகார்கள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், உரிய ஆதாரங்களுடன் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஜே.எஸ். இன்புதுரை கடந்த மாதம் 7-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அமலாக்கத்துறை வழங்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் மீதான புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் தீவிரமானவை என்பதால், அதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.  

இதற்கு அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார், “தி.மு.க அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ. 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு.கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இன்பதுரை செய்தியாளர்களிடம் விரிவான விளக்கத்தை அளித்தார். தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகக் கூறிவிட்டு, நடைமுறையில் வேலை பெற்றுத் தருவதற்காகப் பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது ஒரு மிகப்பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டிய அ.தி.மு.க, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. ஆனால், சட்டப்படி ஒரு அரசு முகமை வழங்கிய தகவலின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தும், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் விசாரணையின் போது, அரசியல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், ஒரு தனிமனிதன் நீதிமன்றத்தை நாட முடியாத சூழல் நிலவும் போது, ஒரு மக்கள் பிரதிநிதி அல்லது எதிர்க்கட்சியினர் தவிர வேறு யார் நீதிக்காக வர முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வழக்கின் சாராம்சத்தை கவனிக்குமாறு அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதற்கட்ட விசாரணைக்கு 180 நாட்கள் வரை எடுத்துக்கொண்டால், அதற்குள் குற்றவாளிகள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லவும், முக்கிய ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த அக்டோபர் மாதமே ஆதாரங்கள் வழங்கப்பட்டும். இதுவரை வழக்கு பதிவு செய்யாதது குறித்து அதிருப்தி வெளியிட்டார். 

ஒரு கட்டத்தில் இந்த வழக்கை சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை முகமைக்கு மாற்றக்கூட ஆலோசித்ததாகக் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது முதற்கட்ட விசாரணை தேவையில்லை என்றும், உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இந்த ஊழல் புகாரில், நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு அமைச்சர் கே.என்.நேருவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்றும், முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0