ஓய்வுக்குப் பின் அரசியலா? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை அம்பாசமுத்திரத்தில் போட்டியா?
ஓய்வுக்குப் பின் அரசியலா? என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை அம்பாசமுத்திரத்தில் போட்டியா?
என்கவுன்டர் புகழ் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சசிகலாவுடன் திடீரென சந்தித்துப் பேசியது. தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நெருங்கியவுடன் பல்வேறு நபர்களும் தேர்தல் களத்தில் குதிப்பார்கள். அதில் தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிப்பார்கள். அதேபோலத்தான் வீட்டில் அமைதியாக இருந்த சசிகலா திடீரென கட்சி ஆரம்பிப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
குறிப்பாக தனது தம்பி திவாரன் நடத்தும் அண்ணா திராவிடர் கழகத்தை தத்தெடுத்து தனது ஆதரவாளர்களை போட்டியிட வைக்க திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறாராம். குறிப்பாக அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்தவர்களை தோற்கடிக்க பண உதவியும் செய்வத்கான பணிகளை தொடங்கியுள்ளாராம். அதன் ஒரு கட்டமாக ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை சசிகலாவை, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது சசிகலாவின் கட்சியில் சேருவது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. வெள்ளத்துரையின் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்தான் வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அம்பாசமுத்திரம் தொகுதியில் வெள்ளத்துரையின் மனைவி போட்டியிட்டார். அப்போது வெள்ளத்துரை நெல்லை நகர கூடுதல் கமிஷனராக இருந்தார்.
மனைவி போட்டியிடுவதால் அவர் வேலூருக்கு மாற்றப்பட்டார். திமுக ஆட்சி அமைந்ததும், காஞ்சிபுரம் கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றபோது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்தவர் தற்போது சசிகலாவுடன் இணைந்து தேர்தலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். அரசியலிலும் தீவிரமாக இறங்க உள்ளார்.
யார் இந்த வெள்ளத்துரை? நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, ஆரம்பத்தில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தவர். பின்னர் அந்த பணியில் இருந்து விலகி, அரசு வேலை மோகத்தில் காவல் துறையில் வேலை தேட ஆரம்பித்தார். அந்தச் சூழலில் தான், கடந்த 1997ஆம் ஆண்டில் வெள்ளத்துரை தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கினார் . முதலில் அரசு வேலைக்காக பணியில் சேர்ந்த வெள்ளத்துரை, காக்கிச் சட்டை அணிந்த உடன் முழுமையாக அப்பணியை நேசிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் தான், கடந்த 1998ஆம் ஆண்டில் முதலில் கீரனூர் காவல் நிலையம் அடுத்து திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தபோது வழங்குகளில் எதிலும் சிக்காமலே, பெயரே வெளியே தெரியாமலேயே சைலண்டாக இரட்டை இலக்கத்தில் கொலைகளை செய்துவிட்டு ஜாலியா சுத்தி வந்த கோசி ஜென் என்ற ரவுடியை குட்செட் மேம்பாலத்தில் வைத்து எண் கவுண்டர் செய்தார்.
அடுத்தடுத்து திருச்சி ரவுடி பிச்சைமுத்து போன்றோரை என் கவுண்டர் செய்தார். முட்டை ரவி என் கவுண்டரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ.சண்முகவேல் ஆகியோர் வழக்குகள் எடுத்துக்கொண்டாலும் வெள்ளைத்துரைதான் சுட்டுக்கொன்றார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்ததாக, 2003ஆம் ஆண்டு சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளத்துரை என்கவுண்டர் செய்தார்.
தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே ஆட்டி படைத்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் நடைபெற்றது. இந்த என்கவுண்டர் குழுவில் வெள்ளத்துரை முக்கிய இடம் பிடித்திருந்தார். அடுத்தடுத்து என்கவுண்டர் செய்வதில் வல்லவராக திகழ்ந்த வெள்ளத்துரையை, தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் சவாலான பல முக்கிய வழக்குகளில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ரவுடிகளை ஒடுக்க வெள்ளத்துரை ஸ்பெஷல் ஆபீசராக பயன்படுத்தப்பட்டார் என்றே கூறலாம்.
மேலும், அடுத்தடுத்த என்கவுண்டர் சம்பவங்களால் வெள்ளத்துரை விரைவில் பதவி உயர்வும் பெற்றார். தனது 27 வருட காவல்துறை பணியில் வெள்ளத்துரை 12 என்கவுண்டர் செய்துள்ளார். எனவே தான் வெள்ளத்துரை தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்டார். மேலும், காவல்துறை அதிகாரிகள் இவரை டிரபிள் சூட்டர் என்றும் அழைப்பதுண்டு.
2021 தேர்தலில் வெள்ளத்துரை மனைவி ராணி ரஞ்சிதம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் பெரிய அளவில் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், மனைவி வழியில் வெள்ளத்துரையும் ஒய்வுக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
3
Angry
0
Sad
0
Wow
0