திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக ; கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! - ஸ்டாலின் பெருமிதம்
திமுகவுடன் கைகோர்த்த தேமுதிக ; கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! - ஸ்டாலின் பெருமிதம்
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிய நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலாயத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு உள்ளிட்டோர் அண்ணா அறிவாலய வாசல் வரை வந்து வரவேற்று திமுக தலைவரிடம் அழைத்துச் சென்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரேமலதாவுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
2016 இல் திமுக கூட்டணிக்கு தேமுதிகவை கொண்டுவர எடுத்த முயற்சி பலன் அளிக்காத நிலையில், 2026 இல் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது.
தேமுதிக திமுகவில் இணைந்தது குறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், " முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்"என்று பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக,திமுக தரப்பில் 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது . ஆனால் அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் டிமாண்ட் வைத்தார். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இறங்கி வராத நிலையில் இன்று திமுகவுடன் தேமுதிக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0