ஆரூரா, ஓம் நமசிவாய கோஷம் விண்ணதிர மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் கோலாகலம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
ஆரூரா, ஓம் நமசிவாய கோஷம் விண்ணதிர மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் கோலாகலம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
தமிழ்நாட்டின் தென் கைலாயம் எனப் பெயர் பெற்றதும், திருச்சியின் அடையாளமாக போற்றப்படுவதுமான திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலின் மலை, மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு, மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் தரிசனம் தருகின்றார். மலையின் நடுபகுதியில் தாயுமானவர் சுவாமிகள் தரிசனம் தருகின்றார். மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் உச்சிப்பிள்ளையாராக காட்சியளிக்கின்றார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் 69 வது தேவாரத்தலம் ஆகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான திருச்சி மலைக்கோட்டை, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானது எனக் கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் சித்திரைத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர்(சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 26ஆம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 6.10 மணிக்கு மேஷ லக்னத்தில் தொடங்கியது.
மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயார் எழுந்தருளினார். இவர்களுக்கு முன்னதாக சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் வலம் வந்தனர்.
மலைக்கோட்டை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா, ஓம் நமசிவாய என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
முன்னதாக, இன்று அதிகாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இனிகோ இருதயராஜ் ஆகியோர் பெரிய தேரை வடம் பிடித்து இழுத்து சித்திரை தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் கழகச் செயலாளர் மு மதிவாணன், பகுதி கழக செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கருணாநிதி, ஸ்ரீதர், கோவிந்தராஜ், கலைசெல்வி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மலைக்கோட்டை தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0