உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு எதிரொலி: புதுச்சேரி மதுபானங்களை இனி தமிழகம் எடுத்து செல்ல முடியுமா?

Apr 26, 2026 - 23:47
 0  92
உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு எதிரொலி: புதுச்சேரி மதுபானங்களை இனி தமிழகம் எடுத்து செல்ல முடியுமா?

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு எதிரொலி: புதுச்சேரி மதுபானங்களை இனி தமிழகம் எடுத்து செல்ல முடியுமா?

புதுச்சேரியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள் தொடர்பாக, உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பினை அளித்துள்ள சூழ்நிலையில், இனி புதுச்சேரியில் இருந்து தமிழக மாநிலத்திற்கு தாராளமாக மதுபானங்களை கொண்டு செல்ல முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. 

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டீல் கொண்டு சென்றவர் மீது தொடரப்பட்ட வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தனிநபர் ஒருவர் தனது பயன்பாட்டுக்கு 4.5 லிட்டர் மதுவை வைத்திருக்க, தமிழக அரசு விதிகள் அனுமதிக்கும் நிலையில், புதுச்சேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட 1.680 லி., மதுபானம் மட்டுமே இருப்பதால் அந்த வழக்கினை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் சமூக வளைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவினால் தமிழக போலீசாரின் அனைத்து கெடுபிடிகளும் நீங்கியது. இனி, புதுச்சேரியில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவில் மதுபானத்தை தமிழகத்திற்கு எடுத்து செல்லலாம் என்று புதுச்சேரியில் தகவல் பரவி வருகிறது. 

புதுச்சேரியிலிருந்து மதுபானம் வாங்கி வந்தா இனி போலீஸ் பிடிக்க மாட்டாங்கப்பா என்று தமிழகத்திலும் எதிரொலிக்கிறது. அப்படியென்றால், புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு எவ்வளவு மதுபானங்களை ஒருவர் எடுத்து செல்லலாம் என, புதுச்சேரி கலால்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அப்படியெல்லாம் கொண்டு செல்ல கூடாது. அது சட்டப்படி தவறு என்று, சட்ட துணுக்கங்களை பட்டியலிட்டு எச்சரித்தனர். 

 இது குறித்து கலால்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுலா நகரமான புதுச்சேரி, மதுபான வருவாயை பெரிதும் நம்பி உள்ளது. இதனால் தனிநபர் மதுபானங்கள் கொண்டு செல்ல புதுச்சேரி கலால் சட்டம் அனுமதிக்கிறது. இந்த சட்டத்தின்படி தனிநபர் ஒருவர் தனது சொந்த நுகர்வுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை(ஐ.எம்.எப்.எல்.,) 4.5 லிட்டர் வரை வைத்திருக்கலாம். வெளிநாட்டு இறக்குமதி மதுபானம் என்றாலும் 4.5 லிட்டர் வைத்திருக்கலாம். பிராந்தி, விஸ்கி, ஜின், ரம்மிற்கு இது பொருந்தும். அதுவே பீர் என்றால் 9 லிட்டர், கள்ளு என்றால் 1 லிட்டர் தன்னுடைய நுகர்வுக்காக வைத்திருக்கலாம். சாராயம் கூட 4 லிட்டர் வைத்திருக்கலாம். வீடுகளுக்கும் கொண்டு செல்லலாம். ஆனால் அதை தாண்டி வைத்திருந்தால் வழக்கு, அபராதம் விதிக்கலாம். ஆனால் இவை அனைத்துமே புதுச்சேரி எல்லைக்குள் தான் பொருந்தும். அதுவே அந்த மதுபானங்களை தமிழக பகுதிக்கு கொண்டு என்றால் இது பொருந்தவே பொருந்தாது. புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் மதுபானம் கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல அந்தந்த மாநில கலால் துறையின் அனுமதி தேவை. அந்த அனுமதி இல்லையென்றால் கடத்தலாக தான் கருதி வழக்கு பதிவு செய்வர். உதாரணமாக தமிழகத்தில் சாராயத்திற்கு தடை உள்ளது. கள்ளுக்கும் தடை இருக்கிறது. அதே வேளையில் புதுச்சேரியில் 4 லிட்டர் சாராயமும், 1 லிட்டர் கள்ளும் கொண்டு செல்லாம். இப்படி இருக்கும்போது, புதுச்சேரி கலால் விதியை காரணம் காட்டி தமிழக பகுதிக்கு மதுபானங்களை கொண்டு சென்றால் சிக்கல் தான் ஏற்படும். கடத்தல் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவார்கள். எனவே, தமிழக பகுதிகளுக்குள் புதுச்சேரி மதுபானங்களை கொண்டு செல்ல கூடாது. இந்த வழக்கில் நீதிமன்றம் கருணை காட்டியிருக்கலாம், ஆனால் சட்ட புத்தகங்கள் இன்னும் மாறவில்லை. 

எனவே, உயர் நீதிமன்றம் சொல்லிடுச்சு என்று புதுச்சேரி மதுவுடன் தமிழக பார்டரில் கால் வைப்பது, உங்களைச் சிறைக்கம்பிக்கு பின்னால் தள்ளக்கூடும். இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு தெளிவான வழிகாட்டுதல் வரும் வரை, மதுப்பிரியர்கள் உஷாராக இருப்பதே நல்லது' என்றனர். 

தமிழக கலால் போலீசார் சொல்லுவது என்ன?: தமிழகத்தில் தனி நபர் ஒருவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களை 4.5 லிட்டர், பீர் 9 லிட்டர், கொண்டு செல்லலாம். இந்த மதுபானங்கள் டாஸ்மாக் கடையில் வாங்கியதாக இருக்க வேண்டும். அந்த ரசீதையும் வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்தே, வெளி மாநிலத்தில் இருந்து ஒரு சொட்டு மதுவைக் கூட தமிழகத்தில் எடுத்து வர கூடாது என்கின்றனர் தமிழக கலால் போலீசார்.

 ஒரே குழப்பம்: புதுச்சேரியிலிருந்து எடுத்து வரப்பட்ட மதுபானம் என்றாலும் கூட அது தனிநபர் நுகர்வுக்குள்ளாகவே இருந்ததால் உயர் நீதிமன்றம் வழக்கினை ரத்து செய்துள்ளது. அதே வேளையில் தமிழகம் - புதுச்சேரி போலீசார் அண்டை மாநில சரக்குகளுக்கு எங்கள் மாநிலத்திற்கு நுழைய இடமில்லை என்று விதிகளை பட்டியலிட்டுள்ளன. இரு மாநிலங்களுக்கு பொதுவாகவே வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றம் வழக்கினால் மட்டுமே குழப்பம் தீரும் என்கின்றனர் மது பிரியர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0