தேர்தல்; ஒரே நாளில் ரூ.350 கோடிக்கு மது விற்பனை 

Apr 22, 2026 - 10:04
 0  25
தேர்தல்; ஒரே நாளில் ரூ.350 கோடிக்கு மது விற்பனை 

தேர்தல்; ஒரே நாளில் ரூ.350 கோடிக்கு மது விற்பனை 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை ஏப்ரல் 23-ஆம் நடைபெறுவதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் டாஸ்மார்க் மற்றும் தனியார் மதுக்கடைகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விடுமுறைக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் 21ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இது குறித்த விபரம் வருமாறு ;

சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவின்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், வாக்காளர்களுக்கு மது வினியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதன்படி நேற்று (ஏப்ரல் 21) முதல் நாளை வரை (3 நாட்கள்) டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் மற்றும் சொகுசு விடுதி பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றே கடைகள் மூடப்பட்ட நிலையில், நாளை தேர்தல் முடிவடையும் வரை இந்த விடுமுறை அமலில் இருக்கும். வழக்கமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை விற்பனை நடைபெறும். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இந்தத் தொகை சற்று அதிகரிக்கும்.

இந்நிலையில், 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால், நேற்று முன்தினம் மதுப்பிரியர்கள் கடைகளில் அலைமோதினர். கடை மூடும் நேரம் வரை போட்டி போட்டு மது வகைகளை வாங்கிச் சென்றனர். இதன் விளைவாக, அன்றைய ஒரு நாளில் மட்டும் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதலே, டாஸ்மாக் விற்பனை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது; வழக்கமான விற்பனையை விட 30% மேல் அதிகமாக விற்பனை நடைபெறும் கடைகளில், அதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய தீவிரக் கண்காணிப்பு காரணமாகவே, 3 நாட்கள் விடுமுறை இருந்தும் விற்பனை 350 கோடி ரூபாயோடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் என 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், தற்போது தேர்தல் விடுமுறையை ஒட்டி மது விற்பனை உச்சத்தைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0