எனது வெற்றியை விட நண்பன் மகேஷின் வெற்றி எனக்கு மிக முக்கியம் - உதயநிதி ஸ்டாலின் 

Apr 12, 2026 - 10:05
 0  46
எனது வெற்றியை விட நண்பன் மகேஷின் வெற்றி எனக்கு மிக முக்கியம் - உதயநிதி ஸ்டாலின் 

எனது வெற்றியை விட நண்பன் மகேஷின் வெற்றி எனக்கு மிக முக்கியம் - உதயநிதி ஸ்டாலின் 

திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;

இங்கு வந்திருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு நண்பர்களுக்கும் வந்திருக்கக்கூடிய தாய்மார்கள், தங்கைகள், அக்காக்கள், சகோதரிகள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞருடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 நான் உங்களையெல்லாம் சந்திச்சு, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உதய சூரியன் சின்னத்துல வாக்களிங்க அப்படின்னு கேட்கலாம்னு வந்தேன். ஆனா நீங்கலாம் ஏற்கனவே முடிவு கட்டிட்டீங்க. நியாயமா பார்த்தா நான் வந்திருக்கக் கூடாது. ஏன்னா இது வெற்றி. ஏற்கனவே வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று சார் 

 "அன்பில் மகேஸ் எனது நெருங்கிய நண்பர் என்பது எனக்குப் பெருமை. கருணாநிதி - அன்பில் தர்மலிங்கம், மு.க.ஸ்டாலின் - பொய்யாமொழி எனத் தொடங்கி, இன்று எங்களுடையது மூன்றாவது தலைமுறை நட்பு. நான் எனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணிக்குக் கூட இன்னும் தேர்தல் வேலைகளுக்குச் செல்லவில்லை. ஆனால், எனது வெற்றியை விட நண்பன் மகேஷின் வெற்றி எனக்கு மிக முக்கியம் என்பதால் இங்கு வந்துள்ளேன்.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிகளில் இடைநிற்றலை (Drop-out) 100% குறைக்கத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருவெறும்பூர் மற்றும் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு பிரம்மாண்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். ஆனால், 3500 கோடி அல்ல, 10,000 கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் உறுதியாகக் கூறிவிட்டார்.

பின்னர், கடந்த காலங்களில் திருவெறும்பூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்:

துவாக்குடி: ₹58 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி மற்றும் ₹4 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம்.

காட்டூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 'வானவில் மன்றம்' தொடக்கம்.

 இழந்தப்பட்டியில் ₹50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பணிகள்.

மேலும், 13 வார்டுகளில் ₹155 கோடி மதிப்பிலான சாலைகள் மற்றும் ₹23 கோடியில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம். அரியமங்கலம் குப்பைக்கிடங்கு சீரமைப்பு மற்றும் தமிழகத்தின் இரண்டாவது ஜல்லிக்கட்டு மைதானம் போன்றவற்றை பட்டியலிட்டார்.

மேலும், நீட் தேர்வு மற்றும் உதய மின் திட்டங்களை அனுமதித்து தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்தவர் பழனிசாமி. தொடர்ந்து 10 தோல்விகளைச் சந்தித்த அவர், தற்போது 14-வது தோல்விக்குத் தயாராகி வருகிறார்.

இந்த திருவெறும்பூர் தொகுதிக்கு பல சிறப்புகள் உண்டு. இங்க திருவெறும்பூர் தொகுதியில பாத்தீங்கன்னா ஒரு பக்கம் தொழிற்சாலைகளும் இருக்கும், ஒரு பக்கம் விவசாய நிலங்களும் இருக்கும். நகரமும் இருக்கும், கிராமமும் இருக்கும். எல்லா சமுதாய மக்களும் ஒற்றுமையா வாழுகின்ற தொகுதி இந்த திருவெறும்பூர் தொகுதி. இந்த சிறப்பான தொகுதி மீண்டும் இன்னும் அதிகமான சிறப்பு பெறணும்னா அதுக்கு உங்களுடைய வெற்றி வேட்பாளர் அன்பில் மகேஷ் அவர்களையும் அதிகமான வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வச்சு சட்டமன்றத்துக்கு அனுப்புங்க. நீங்க வெறும் சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கல, எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கல ஒரு முக்கியமான அமைச்சரை தேர்ந்தெடுக்க போறீங்க.

"கடந்த முறை 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த முறை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அன்பில் மகேஸை மீண்டும் சட்டமன்றத்திற்கு அமைச்சராக அனுப்பி வைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 முன்னதாக பிரச்சாரத்திற்கு வந்த உதயநிதிக்கு செங்கோல் கொடுக்கப்பட்டது. அதேபோல் உதயநிதிக்கும் மகேஷ் பொய்யாமொழிக்கும் திமுகவினர் வீரவால் பரிசாக வழங்கினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0