பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து 32 பேர் வேட்புமனு தாக்கல்; விஜய் உருவ பொம்மையுடன் வந்த தவெகவினர்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை எதிர்த்து 32 பேர் வேட்புமனு தாக்கல்; விஜய் உருவ பொம்மையுடன் வந்த தவெகவினர்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடந்த 30 ஆம் தேதியில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று மட்டும் 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருச்சி மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், நாடாளுமன்ற திருச்சி தொகுதியின் உறுப்பினராக இருமுறை பணியாற்றியவருமான ப. குமார், திமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை எதிர்த்து, 2 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளராகவும், திமுக அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளராகவும் இருந்த நவல்பட்டு விஜி, திமுகவிலிருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டு, அமைச்சர் அன்பில் மகேஸை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தவெக வேட்பாளராகப் போட்டியிடும் நவல்பட்டு விஜி திருவெறும்பூரில் இருந்து திறந்த வெளி வாகனத்தில் விஜய் போன்று உருவம் பொறித்த பொம்மையுடன் 1000க்கும் மேற்பட்ட தவெக கட்சியினருடன் திருவெறும்பூர் தொகுதியின் தேர்தல் அலுவலகமான திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை, திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், தேர்தல் நடத்தும் திருவெறும்பூர் தொகுதி அலுவலருமான கே.அமுதாவிடம் தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் என்ற ராஜேஷ் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக பிச்சைமுத்து என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உரிமைகளுக்காகவும், உழவர்களின் உரிமைக்காகவும் போராடிவரும் புதிய தமிழகம் கட்சி, எந்தவொரு பெரிய கூட்டணியிலும் (திமுக, அதிமுக, அல்லது தேஜகூ) இணையாமல் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட பிச்சைமுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள், இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருவெறும்பூர் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளராக போட்டியிட ரஜ்ஜித் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் மாற்று வேட்பாளர்கள் உட்பட திருவெறும்பூர் தொகுதியில் இன்று மட்டும் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆக மொத்தம் திருவெறும்பூர் தொகுதியில் 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குமார் என்ற பெயரில் 3 நபர்களும் விஜி என்ற பெயரில் இரண்டு நபர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதும், தவெகவை சேர்ந்த சிலர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0