ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்துக்கும், அதன் அரசியலுக்கும் எதிராக நடைபெறும் ஒரு போராட்டம்: மணப்பாறையில் கனிமொழி எம்.பி

Apr 4, 2026 - 15:02
 0  33
ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்துக்கும், அதன் அரசியலுக்கும் எதிராக நடைபெறும் ஒரு போராட்டம்: மணப்பாறையில் கனிமொழி  எம்.பி

ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்துக்கும், அதன் அரசியலுக்கும் எதிராக நடைபெறும் ஒரு போராட்டம்: மணப்பாறையில் கனிமொழி எம்.பி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமதை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம். பி, மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிய தாவது; உச்சி சூரியனினும், உதய சூரியனுக்காக நீங்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது, வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறது. 

நம்முடைய வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமத்க்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எல்லோராலும் நேசிக்கப்படக் கூடிய ஒரு வேட்பாளர். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய, எந்தவித வேற்றுமையும் இல்லாமல் அன்போடு நடந்து கொள்ளக் கூடியவர். மறுபடியும் மக்கள் பணியை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை, நீங்கள் அவருக்கு உருவாக்கித் தர வேண்டும்.

தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள மக்களுக்குப் பல்வேறு பணிகளை செய்துள்ளார். தொகுதி அளவில் அனைத்து ஊராட்சிகள், ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று களப்பணிகளை செய்து வருகிறார். மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் நீண்ட வருட கோரிக்கையான அரசு கல்லூரி அப்துல் சமதுவின் தீவிர முயற்சியின் காரணமாக கொண்டு வரப்பட்டது.

புத்தாநத்தம் முதல் துவரங்குறிச்சி வரையிலான தேசிய நான்கு வழிச்சாலை நீண்ட வருட கோரிக்கையாக இருந்தது, அதையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். தொகுதி அளவில் பல்வேறு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

நம் திமுக தலைவர் செயல்படுத்திய திட்டங்களை அனைத்தையும் மக்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சேர்த்துள்ளார். திமுக நிர்வாகிகளோடு இணக்கமாகவே செயல்பட்டு வருகிறார். தொகுதி சார்ந்த முன்னெடுப்புகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தையும் கழக நிர்வாகிகளோடு ஆலோசித்து, இணைந்து செயலாற்றி வருகிறார்.

நமது கூட்டணி என்பது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி, எதிரணியில் உருவாகியுள்ள கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக், வேளாண் திருத்தச் சட்டம், ஹிந்தி திணிப்பு, கீழடியுடைய ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொன்னதாக இருக்கட்டும் நிதி பகிர்வு உள்ளிட்டவை ஆதரவளித்தவர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழ்நாட்டைப் பற்றி அக்கறை இல்லாத கூட்டணி. தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கக்கூடிய கூட்டணி. 

பாஜக ஒரு பெரிய “வாஷிங் மெஷின்” வைத்துள்ளது. யார் மீது எந்த வழக்கு இருந்தாலும், பாஜக கூட்டணியில் இணைந்தவுடன் அவர்கள்மீது உள்ள அனைத்து வழக்குகளும் கைவிடப்படுகின்றன. IT, CBI, ED போன்ற அமைப்புகளை டெல்லியில் “ICE” என்று கூறுவார்கள்.

இது தமிழ்நாட்டுக்கும் நாக்பூருக்கும் இடையிலான போர். ஒரு விதத்தில் பார்த்தால், இது கீழடியும் நாக்பூரும் இடையிலான போர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து நல்ல எதிர்காலத்திற்காக வாழ வேண்டும். இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கலாச்சாரத்துக்கும், அதன் அரசியலுக்கும் எதிராக நடைபெறும் ஒரு போராட்டம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் என்றால் என்ன? வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செயல்படும், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய என்.ஜி.ஓ.க்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும். அந்த நிதியின் மூலம் அவர்கள் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்கிறார்கள்.

பெற்றோர் இல்லாத குழந்தைகள் சேர்ந்து படித்து வாழ்வதற்காக விடுதிகள் அமைக்கப்படுகின்றன. நானும் அப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் படித்திருக்கிறேன். 

சென்னை சர்ச் பார்க் பகுதியில் உள்ள, கிறிஸ்தவர்கள் நடத்தும் ஒரு பள்ளிதான் அது. அதே பள்ளியில்தான் முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவும் படித்தார்கள்.

நான் மட்டும் அங்கே படித்தேன்” என்று சொல்லி அதற்கான ஒரு கதையையும் கூறுவார்கள். ஆனால், எனக்கு முன்னரே அங்கே படித்தவர் ஜெயலலிதா. இவ்வாறு வெளிநாட்டு நிதியை பெற்று, இங்கு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. முதியவர்களுக்கான சேவை மையங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், இத்தகைய சேவைகளை கட்டுப்படுத்தவும், குறிப்பாக இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற சமூகங்களின் அமைப்புகளையும், அரசின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த என்.ஜி.ஓ.வை ஏன் மூட வேண்டும்? அவர்களுக்கு வந்த நிதியை நாங்களே எடுத்துக்கொள்வோம்; வேண்டுமானால், உங்களுக்கு வழங்கப்பட்ட அந்த உரிமையையும் பறித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுடன், காரணம் கூறத் தேவையில்லாத ஒரு ஒடுக்குமுறை சட்டத்தை கொண்டு வருகின்றனர். நம்முடைய முதலமைச்சர் அதற்கு எதிராக கேள்வி எழுப்புகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, இதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பையும் வெளிப்படுத்தவில்லை.

முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று சொன்னபோது, அதை வழங்க முடியாது, யாராலும் வழங்க முடியாது என்று கூறினார்கள். ஆனால் இன்று, முதலமைச்சர் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறியவுடன், “நானும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவேன்” என்று கூறுகின்றனர்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். அதே விவசாயிகளுக்காக, இன்று எந்தவித மின்மீட்டரும் பொருத்தப்படாத புதிய பம்பு செட்டுகளை, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவோம் என்று நம்முடைய முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தான் திராவிட மாடல் ஆட்சி.

“Choice is yours” என்று கூறி, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பனை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார். அந்த கூப்பனை பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் டிவி இருக்கிறதா? அதை மாற்றி இன்னும் பெரிய டிவி வாங்க வேண்டுமா? பழைய டிவியை கொடுத்து, இந்த 8000 ரூபாய் கூப்பனை பயன்படுத்தி புதிய டிவி வாங்கிக் கொள்ளலாம். அதனால், 8,000 ரூபாய் கூப்பனை பயன்படுத்தி, உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

தலைவர் கலைஞர் எப்படி “தொலைக்காட்சி பெட்டி வழங்குவேன்” என்று கூறி அதை நிறைவேற்றினாரோ, அதுபோல அவர் வழங்கிய வண்ணத் தொலைக்காட்சிகள் இன்று வரை பயன்பாட்டில் உள்ளன.

நாம் வாங்கும் டிவிகள் இரண்டு ஆண்டுகளிலேயே செயலிழந்து விடுகின்றன; ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய தொலைக்காட்சி இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது.

கலைஞரின் வாரிசாக, கலைஞரைப் போல சொன்னதைச் செய்து காட்டும் முதலமைச்சர். நமது திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமத் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.

 இந்த கூட்டத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0