இந்தத் தேர்தல் விசில் புரட்சி தேர்தல்; திமுக பாஜக இரண்டும் ஒன்றுதான் : ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் - திருச்சியில் விஜய்

Apr 2, 2026 - 14:10
 0  88
இந்தத் தேர்தல் விசில் புரட்சி தேர்தல்; திமுக பாஜக இரண்டும் ஒன்றுதான் : ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் - திருச்சியில் விஜய்

இந்தத் தேர்தல் விசில் புரட்சி தேர்தல்; திமுக பாஜக இரண்டும் ஒன்றுதான் : ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் - திருச்சியில் விஜய் 

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய், திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்தில் கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையருமான முத்து முருகேச பாண்டியிடம் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாலக்கரை அலுவலகத்திற்கு வந்த விஜய் நல்ல நேரத்திற்காக காத்திருந்து 12:30 மணிக்கு மேல் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். கிறிஸ்தவர்கள் புனித நாளாக கருதும் பெரிய வியாழன் இன்று என்பதாலும் 12 30 மணி முதல் 1:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அதற்காக காத்திருந்து 12.30மணிக்கு மேல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

வேட்பு மனு தாக்கலின் போது அவருடன் த.வெ.க முக்கிய நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விஜய்க்கு மாற்று வேட்பாளராக கு.பா.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

வேட்பு மனுவை தாக்கல் செய்த விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தனது முதல் பிரச்சார கூட்டத்தை துவக்கிய அதே இடத்தில் இன்று மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

சுமார் 1,500 பொதுமக்கள் மட்டுமே கூட வேண்டும் என்று காவல்துறை 25க்கும் மேல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி கொடுத்திருந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் மரக்கடை பகுதியில் கூடி ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர்.

தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியான மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் பேசியதாவது ; நெஞ்சில் குடியிருக்கும் என துவங்கிய போது விசில் சத்தம் விண்ணதிர்ந்தது. கேஸ் பிரச்சனை எப்படி இருக்கு? கேஸ் தட்டுப்பாடு பிரச்சினைகளுக்கு மத்திய மாநில அரசுகள் தான் காரணம். கேஸ் பிரச்சனைகளுக்கு நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் ஸ்டாலின் சார் ஆட்சி நடத்துகிறார். ஸ்டாலின் சார் வீட்டில் ரெய்டு என்றால் உடனே டெல்லிக்கு விமான மூலம் பறந்து செல்வார். இந்த கேஸ் தட்டுப்பாடு பிரச்சனைக்கு ஸ்டாலின் சார் ஏன் டெல்லிக்கு பறந்து செல்லவில்லை. டெல்லிக்கு பறந்து சென்று கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வலியுறுத்தலாமே!

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் ஆறு சிலிண்டர் விலையில்லாமல் கொடுக்கப்படும் என்று நாங்கள் சொன்னதை சொன்ன மாதிரியே நிறைவேற்றுவோம். தங்கைகளுக்கு திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கமும் பட்டு சேலைகளும் கொடுப்போம். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2500 சொன்ன மாதிரியே கொடுப்போம். நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போன்றே அனைத்தையும் செய்வோம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளில் தான் எங்களது கவனமும் இருக்கும்.

திருச்சியில் இங்க ஒரு மந்திரி இருக்கிறார் நகராட்சி நிர்வாக துறையில் பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக பல கோடி லஞ்சம் பெற்று பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறார். 

நகராட்சி நிர்வாகத்துறையில் மட்டுமே பல்லாயிரம் கோடி ஊழல் என்றால் நீங்களே யோசித்துப் பாருங்கள். ஸ்டாலின் சார் ஆட்சியில் அனைத்திலும் ஊழல் தான். அடிப்படை வசதிகளையே செய்ய முடியாத தீய சக்தி திமுக ஆட்சி தூக்கி எறியப்படும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்தது திமுக அரசு. திமுக அரசை தூக்கி எறிவோமா? ஸ்டாலின் வரி என்றேனே ஏன் பதில் இல்லை. ஒப்புக் கொண்டார்களோ என்ன. கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு வேலை கொடுப்போம் என சொன்னார்கள் ஐந்து பேருக்கு மட்டுமே வேலை கொடுத்தார்கள் காலிப் பணியிடங்களை நிரப்புகும் எனக் கூறினார்கள் எல்லாம் அறிவிப்புதான், யூஸ்லஸ் அரசு, இந்த திமுக அரசு. அதனால் இதனை தூக்கி எறிய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பது கூட்டு சூழ்ச்சி. கரூர் சம்பவம் சூழ்ச்சி. எனக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகவும் நீதி நியாயம் கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். திமுகவை நம்ப வேண்டாம், பாஜகவையும் நம்ப வேண்டாம் இரண்டு பேரும் ஒன்றுதான் என்றவர் விஜய் தேர்தல் பரப்புரை பாடலை பாடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே பேசிய விஜய் சுருக்கமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்றார்.

முன்னதாக, இந்த முறை பரப்புரை மேற்கொள்ள திருச்சி வந்த விஜய்க்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. விமான நிலையம் துவங்கி, வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதி, பிரச்சார மேடை என அனைத்து இடங்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் விஜயின் பவுன்சர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. அதைப்போல் விஜயின் பிரச்சார பாதுகாப்புக்காக வந்த காவலரின் மீது ஆதவ் அர்ஜுனா கார் மோதியதில் காவலருக்கு கால் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விஜயின் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமியின் சொந்த வீடு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள இருதயபுரம் பகுதி என்பதால் விஜய் எப்பொழுதுமே திருச்சி கிழக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0