திருவானைக்காவலில் பங்குனித் தேரோட்டம் கோலாகலம்; சிவாய கோஷம் விண்ணதிர வடம் பிடித்த பக்தர்கள்
திருவானைக்காவலில் பங்குனித் தேரோட்டம் கோலாகலம்;
சிவாய கோஷம் விண்ணதிர வடம் பிடித்த பக்தர்கள்
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய கோஷம் விண்ணதிர தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமுமாகவும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி ஆலயம் சிவஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித் திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் கடந்த மார்ச் 15-ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து தினசரி சுவாமி, அம்பாளுடன் ரிஷப வாகனம், காமதேனு வாகனம், சூரியசந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா கண்டருளும் வைபவம் நடைபெற்று வந்தது. 6 ம் திருநாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக சுவாமி, அம்பாள் தனித்தனி அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரர் ஒரு தேரிலும், சன்னதி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என சிவாய கோஷம் விண்ணதிர திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முதலாவதாக சுவாமியும், அம்பாளும் எழுந்தருளிய தேரை பக்தர்கள் இழுத்து வந்து நிலைக்கு சேர்த்தனர். பின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச்செல்லப்பட்டது. தேர் திருவிழாவையொட்டி திருவானைக்காவல் பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.
தேரோட்டத்தை முன்னிட்டு திருவானைக்காவல் பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுளை இந்துசமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0