விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது தான் திமுக; மேற்காசிய போர் குறித்து பீதியடைய வேண்டாம்- திருச்சியில் மோடி

Mar 11, 2026 - 20:18
 0  29
விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது தான் திமுக; மேற்காசிய போர் குறித்து பீதியடைய வேண்டாம்- திருச்சியில் மோடி

விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது தான் திமுக - திருச்சியில் மோடி

தமிழகத்திற்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி. சமீபத்தில் மதுரைக்கு வந்த மோடி தமிழக அரசை வசை பாடினார். அதேபோல் இன்று திருச்சியில் அரசு நிகழ்ச்சி மற்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக அரசையும், முதல்வர் மற்றும் திருச்சி அமைச்சர் கே என் நேருவையும் வசை பாடினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது; அனைவருக்கும் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். 

திருச்சியில் உங்கள் முன்பு நான் இருப்பது மிகவும் அற்புதமான தருணம். வீரத்துக்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி. மருதிருவர், மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன். மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், அரங்கநாதரை வணங்குகிறேன்.

கடந்த முறை தமிழகம் வந்தபோது திருச்சி ஸ்ரீரங்கத்தில் அழகு கொஞ்சும் தமிழில் கம்பராமாயணத்தை கேட்டு மகிழ்ந்தேன். தமிழ்நாட்டின் புதல்வர் சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சியால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுக தூக்கி எறிய மொத்த மாநிலமும் தயாராகிவிட்டது. ஒரு குடும்பத்திற்கான ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு ஒட்டுமொத்த மக்களுக்குமான ஆட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

திருச்சி மண்ணில் ரூ.5655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன். மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்த்தி உள்ளது. மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லிகையை மாலையில் பாரீஸ், நியூயார்க்கில் விற்கலாம்..

2014 முதல் தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி பகிர்வு செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் அரசு வழங்கிய நிதியை விட பல மடங்கு அதிகம். 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு அமைந்தது. திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்தோடு முடிகின்றது. அமைச்சர்கள் மாறலாம். சட்டசபை மாறலாம். ஆனால் அதிகாரம் என்னவோ ஒரே குடும்பத்திடம் மட்டுமே இருக்கும். விஞ்ஞான ரீதியான ஊழல். இந்த மாதிரிக்கு பெயர் போனது தான் திமுக. இந்த மாதிரி தான் ஒரே ஒரு குடும்பத்தின் ஏடிஎம்-ஆக மாற்றியிருக்கிறது.

ஆடி மாதத்தில் காவிரி பெருகுவதுபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது.

திருச்சியில் உள்ள ஒரு தலைவர் வேலைவாங்கி தருவதாக பெரிய மோசடியில் சிக்கியிருக்கிறார். வேலை பணத்திற்காக விற்கப்படும்போது ஒரு ஏழை மாணவரின் வாழ்க்கை கனவாக போகின்றது. இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேர்கிறதோ அதேபோல தமிழத்தின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது. அதன் குடும்ப சொத்தாக ஆகின்றது. திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுபவர்கள் ஒருபுறம், மறுபுறம் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்படும் நாங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைத்து இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்து செல்வோம்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. என்டிஏ ஆட்சி அமைந்தால் பெண்கள் அச்சமின்றி வாழலாம். ஆனால், குற்றவாளிகள்தான் அஞ்சுவார்கள்.

மேற்காசிய போர் குறித்த வதந்திகளை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம். போர் காரணமாக எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை எப்படியானாலும் இந்திய மக்களின் நலன் பாதுகாக்கப்படும் எனப் பேசினார்.

முன்னதாக, பிரதமர் மோடி திருச்சி வந்ததை முன்னிட்டு திருச்சி மதுரை சாலை திருச்சி புறநகர் வழியான பஞ்சப்பூர் தஞ்சை சாலை, எடமலைப்பட்டி புதூர், ஜங்ஷன் ரயில்வே பாலம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0