தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட வரவேற்பு பேனரில் எடப்பாடி படம் புறக்கணிப்பு; அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட வரவேற்பு பேனரில் எடப்பாடி படம் புறக்கணிப்பு; அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்
திருச்சியில் நடைபெறுகின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் பேனர்களில் இடம் பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டத்திற்காக நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரின் படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், பிரதான கூட்டணிக் கட்சியான அதிமுகவின் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்த மோதல் போக்கு கூட்டணிக்குள் விரிசல் உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. வரவேற்பு வளைவுகளில் பிரதமர் மோடி, அமித்ஷா முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்களான அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜிகே வாசன் ஆகியோரது படங்கள் வரை இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டும் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளதா அல்லது இது ஒரு கவனக்குறைவா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இதே போன்ற ஒரு கூட்டத்தில் பெரியார் படம் வைக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது எடப்பாடியின் படம் விடுபட்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு ‘புறக்கணிப்பு’ என்றே அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் கருதுகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0