கருகும் தாளடி பயிரை காப்பாற்ற பிப்ரவரி 20வரை பத்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்திட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

Feb 3, 2026 - 16:59
 0  7
கருகும் தாளடி பயிரை காப்பாற்ற பிப்ரவரி 20வரை பத்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்திட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

கருகும் தாளடி பயிரை காப்பாற்ற பிப்ரவரி 20வரை பத்தாயிரம் கன அடி தண்ணீரை திறந்திட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் 

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீரை திறக்க வலியுறுத்தி முதல்வருக்கான கோரிக்கை மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அக்டோபர் மாதம் ஏற்பட்ட பேரழிவு பெருமழையை தொடர்ந்து ஒன்றுக்கு இரண்டு தடவைக்கு மேல் தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.பெரும் பொருட் சிலவில் காலம் கடந்து சாகுபடி செய்யப்பட்டதால் பிப்ரவரி இறுதி வரையிலும் தண்ணீர் தேவை உள்ளது.

தற்போது சுமார் 3 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்,

மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது என்பதை அறிகிறோம். இருப்பினும் கருகும் பயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேட்டூர் அணையை திறந்து பிப்ரவரி 20 வரை பாசனத்திற்கு விநாடிக்கு பத்தாயிரம் கன அடி தண்ணீரை விடுவித்து தேவையான பகுதிகளுக்கு முறைப்படுத்தி வழங்கி கருகும் பயிரை பாதுகாக்க அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம், மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்குசுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். 

இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில அரசுக்கு உரிய கிரயத் தொகை ரூ.14 கோடி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் குழு நேரில் பார்வையிட்டு கட்டுமானத்திற்கு உகந்த இடம் என்பதை உறுதிப்படுத்தி அதற்கான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கு உரிய தொகையை வழங்கி கட்டிடத்தை கட்டுவதற்கு சட்டத்துறை தயார் நிலையில் உள்ளது. 

இடத்திற்கான

கிரயத்தொகையை உடனடியாக நகராட்சிக்கு முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.ஒரு சிலரின் அரசியல் தலையிட்டால் நகரத்திற்கு 10 கிலோமீட்டர் அப்பால் இருக்கிற குட்கிராமத்தில் கொண்டு போய் கட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்வதாக தெரிகிறது.

இதனை முதலமைச்சர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மக்கள் வசிப்பிட பகுதியாகவும், நகரத்தின் மையப்பகுதியில் இருக்கிற நீதிமன்ற வளாகத்திற்கான இடத்திலேயே கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு உரிய அனுமதிகளை முதலமைச்சர் விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கரூர் குளித்தலை பகுதியில் அனுமதி இன்றி குவாரிகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்படுவதால் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதனை படம்பிடிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி நிருபர்கள் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல்வாதிகளே நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளி வருகிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது, முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தயவு தாட்சனியமின்றி நடவடிக்கை எடுத்து, கைது செய்து பாதிக்கப்பட்ட செய்தியாளர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

111 கோடி ரூபாயை பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து 32 மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு யானப்பசிக்கு சோளப்பரி போன்றதாகும். உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார். இந்த சந்திப்பின்போது; மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மண்டல தலைவர் துரை பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பிரபாகரன்,வடக்கு மாவட்ட தலைவர் நிழல் தாசன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0