மருத்துவத்துறையில் 17 ஆயிரத்து 780 புதிய வேலைவாய்ப்புகள்- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மா.செ. சுப்பிரமணி 

Jan 31, 2026 - 21:24
Feb 1, 2026 - 09:14
 0  28
மருத்துவத்துறையில் 17 ஆயிரத்து 780 புதிய வேலைவாய்ப்புகள்- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மா.செ. சுப்பிரமணி 

மருத்துவத்துறையில் 17 ஆயிரத்து 780 புதிய வேலைவாய்ப்புகள்- பெரியார் மருந்தியல் கல்லூரியில் மா.செ. சுப்பிரமணி 

 

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிறுவன தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருந்தியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவ மாணவிகள், முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் உள்பட 125 பேருக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது; ’

 

நான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன் என்றாலும் இந்த நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி. அமைச்சராக வந்திருக்கிறார், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக இணை வேந்தர் வந்திருக்கிறார் என்றெல்லாம் நம் ஆசிரியர் பேசினார். இந்த இரு பொறுப்புகளை காட்டிலும் நான் இந்த வளாகத்திற்கு வந்தது பெரியாரின் தொண்டனாக வந்திருக்கிறேன் என்பதில் தான் எனக்கு மகிழ்ச்சியான விஷயம். பெரியாரின் கருத்துக்களை தொடர்ந்து கடைபிடிப்பவனாகவும் அவரது பகுத்தறிவு கொள்கை அடிப்படையில் இருந்து வருவது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்திருக்கிற பெருமை. எனவே, அந்தப் பெருமையோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது மிகப் பெரிய மகிழ்ச்சி. பெரியாரின் பெயரில் இயங்கக்கூடிய இந்த வாளாகத்திற்குள் வந்தால் ஆரம்பம் முதல் பட்டப் படிப்பு வரை முடித்து வெளியில் செல்லும் அளவிற்கு அனைத்து விதமான தொடக்கப் பள்ளிகளையும், நடுநிலைப் பள்ளிகளையும், மேல்நிலைப் பள்ளிகளையும், அதையும் கடந்து மருந்தியில் கல்லூரிகளையும் இனிதே நடத்தி வருகிறது. ஒரே இடத்தில் பெரியார் கல்வி வளாகத்தில் இவ்வளவு அமைப்புகள் இயங்குவது என்பது தமிழ்நாட்டின் வரலாற்றுச் சாதனை.

 தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த மருத்துவத்துறையில் இந்த மருந்தியல் துறை, மருத்துவத்துறை எந்த அளவுக்கான வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். இதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வெளி மாநிலங்களுக்கு மருத்துவம் பார்க்கச் சென்றது மாறி தற்போது உலகின் 70 நாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவம் பார்க்க ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் சிகிச்சைக்காக தமிழகம் வருகிறார்கள். மருத்துவ சுற்றுலாவை பொறுத்தவரை இந்தியாவில் தமிழகத்திற்கு தான் அதிக அளவில் வருகிறார்கள். 

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்களில் இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் 25 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் மருத்துவ சார்ந்த விஷயங்களுக்காக வருகிறது என்பது ஒன்றிய அரசின் புள்ளி விபரங்கள். அந்த அளவில் தமிழக அரசின் மருத்துவ துறை மிகப் பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது. முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்தியாவிலேயே முன்மாதிரி மருத்துவ திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கிற 14 வயது இளம் பெண்கள் ஹெஸ்பிபி என்று சொல்லப்படுகிற ஹியூமன் பாபிலோமா வேக்சின், கருப்பை புற்றுநோயை தடுக்கும் மகத்தான தடுப்பூசி திட்டம், ஒன்றரை ஆண்டு காலகட்டத்தில் உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகளுக்கான மருத்துவமனை, ஆராய்ச்சி கூடங்கள் அமைக்கும் திட்டம் என இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 38 ஆயிரத்து 774 பேர் மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 17 ஆயிரத்து 780 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ துறையில் பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவை வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் நியமனத்திற்கான ஆணைகளை முதல் -அமைச்சர் வழங்க இருக்கிறார்’ என்றார். விழாவிற்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் மல்லிகா, பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், தங்காத்தாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செந்தாமரை சாதனைகளை விளக்கி அறிக்கையாக வாசித்தார். முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரி ஆலோசகர் அன்புராஜ் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், முதல்வர்கள் தலைமையாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0