தை அமாவாசை; அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்
தை அமாவாசை; அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்து, பொதுமக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உதவியாக இருந்தனர்.
இதேபோல், நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், திருவையாறு ஐயாரப்பர் கோயில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.
அதேபோல், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையிலும், நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மேலும் காவிரி நதிக்கரையில் தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்கிருந்த காவிரி தாயாருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், திருவானைக்காவல், சமயபுரம் மாரியம்மன் கோயில்களுக்கும் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் செல்லும் சாலையில் இன்று அதிகாலை முதல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, நண்பகல் மீண்டும் வழக்கம்போல் வாகனப்போக்குவரத்துக்கு போலீஸார் அனுமதியளித்தனர். பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் செய்திருந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0