’வெள்ளைக் குடை பிடிக்கலைன்னா ஸ்டாலினுக்கு என்ன ஆகும் தெரியுமா..?’’ - இபிஎஸ் சஸ்பென்ஸ்

Aug 26, 2025 - 09:14
 0  2
’வெள்ளைக் குடை பிடிக்கலைன்னா ஸ்டாலினுக்கு என்ன ஆகும் தெரியுமா..?’’ -	இபிஎஸ் சஸ்பென்ஸ்

’’வெள்ளைக் குடை பிடிக்கலைன்னா ஸ்டாலினுக்கு என்ன ஆகும் தெரியுமா..?’’ - இபிஎஸ் சஸ்பென்ஸ்

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு தொகுதிகளை அடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியில் அம்மா மண்டபம் சாலையில், ராஜகோபுரம் அருகே குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்போது அவர், ‘’இங்கு 8.30 மணிக்கே வரலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், வழிநெடுக மக்கள் கொடுத்த அன்பான வரவேற்பினால் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சியை கட்டிக்காத்த அம்மாவுடைய தொகுதி இது.. இங்கு போட்டியிட்டு அம்மா முதல்வரானார். இங்கு பேசுவதற்கு பாக்கியம் அளித்த இறைவனுக்கு நன்றி. அம்மா மறைவுக்குப் பிறகு கட்சியை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்தனர், பல்வேறு வழக்குகள் போட்டார்கள். உங்கள் துணையுடன் எதிர்ப்பை தூள் தூளாக்கி பலம் பொருந்திய கழகமாக இன்று உள்ளது. 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, பொன்விழா கண்ட கட்சி. எண்ணற்றத் திட்டங்கள் கொடுத்த அரசு. ஏழைகளுக்கு படிப்படியாக உதவிய அரசு. திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்டது. இந்த தொகுதிக்கு ஏதேனும் திட்டம் கொடுத்தார்களா? இதே அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது, இது பல திட்டங்கள் கொடுத்து முன்மாதிரி தொகுதியாக இருந்தது. கிராமம், நகரங்கள் இணைந்த பகுதி ஸ்ரீரங்கம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. இரண்டு ஆட்சி காலத்தின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தே நீங்கள் முடிவு செய்யலாம். அதிமுக கொண்டுவந்த பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துவிட்டது. தாலிக்குத் தங்கம் திட்டம், திருமண உதவித் திட்டம் தொடரும். மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும். நிறைய கல்விக் கூடங்களை அதிமுக ஆட்சியில் திறந்தோம். ஸ்டாலின் அவதூறு பிரசாரம் பரப்பினார், 10 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று சொன்னார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த நான்காண்டுகளில் திமுக அரசால் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை. கேட்டால், மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். அம்மா அவர்கள் மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தார். நான் முதல்வராக இருக்கும்போது பிரதமரிடம் கேட்டுப்பெற்றேன். இது திறமையான அரசுக்குச் சான்று, உங்களுக்குத் திறமையில்லை, அதனால் வாங்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம். அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளைப் பெற்றோம். போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வி இப்படி பல துறைகளிலும் விருதுகளைப் பெற்றோம். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு. இப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவிட்டது. தினமும் கொலை நிலவரம் பார்க்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. அந்தளவுக்கு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கிறார். எப்போது..? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? இவ்வாறு பேசுவதன் மூலம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். டிஜிபி இருந்தார் 2.0 3.0 4.0 என்று ஓ போட்டுக்கொண்டே ரிடயர்டு ஆகிப்போனதுதான் மிச்சம். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அரசு மாறினால் தான் மக்களுக்கு நிம்மதி. தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதுகாப்பில்லை. எல்லாம் போதைதான் காரணம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றைச் சொல்கிறேன். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்துசெய்யப்படும் என்றனர், ரத்து செய்யவில்லை. ரேஷனில் சர்க்கரை ஒரு கிலோ கூடுதலாகக் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. பெட்ரோ டீசல் விலை குறைக்கப்படும் என்றனர், குறைக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி. இவர்களுடைய அறிவிப்புகளால் 25 மாணவர்களின் உயிர்போனதுதான் மிச்சம், இதன் முழு பொறுப்பை திமுக அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். உரிமைத் தொகை திட்டமே அதிமுக கொடுத்த அழுத்தத்தால் தான் கொடுத்தார், பெண்களின் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது, இப்போது விதியை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள், எதற்காக…? எல்லாம் சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான். அதிமுக தேர்தல் அறிக்கையில் 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம், ஆனால் கவர்ச்சியாகப் பேசி வாக்குகளை திமுகவினர் ஏமாற்றி வாங்கிவிட்டனர். கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். இந்த தொகுதியில் மட்டும் 10 கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். உடம்பில் உள்ள உறுப்பையே திருடுகிறார்கள். திமுகவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள், உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி திருடி விற்றதாக புகார் எழுந்தது. அரசு அமைத்த குழுவே ஆராய்ந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை ரத்துசெய்துவிட்டனர், ஆனால் கைதுசெய்யவில்லை. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இதற்கென்று தனி குழு அமைக்கப்பட்டு நேரடி பார்வையில் விசாரணை நடக்கும் என்று அதிரடி உத்தரவு போட்டிருக்கிறது. நாமக்கல்லில் கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். திருடுவது குற்றமல்லவா? உடல் உறுப்பை திருடுபவர்கள் ஆட்சி செய்யலாமா? இந்தியாவிலேயே உடல் உறுப்பை திருடும் ஒரே அரசு திமுக அரசு. ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் சேலை வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர் வாகனம் வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணித் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். எடப்பாடி பாஜவிடம் அடிமையாகிவிட்டார், ரெய்டு நடந்ததால் அடிமையாகிவிட்டார் என்று திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சொல்கிறார்கள். திமுகவும் பாஜகவுடன் 1999, 2001 தேர்தல்களில் கூட்டணி அமைத்திருந்தது, மத்திய ஆட்சியிலும் அங்கம் வகித்தது. இவர்கள் கூட்டு வைத்தால் நல்ல கட்சி, பாஜக, அதிமுக கூட்டு வைத்தால் மோசமான கட்சியா? திட்டமிட்டு மாறும் சுயநலவாதிகள் திமுகவினர், பச்சோந்தி போல அவ்வப்போது நிறம் மாறுவார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருப்பு பலூன் விட்டார், முதல்வராக ஆனதும் வெள்ளைக் குடை பிடித்தார், பிடித்துத்தான் ஆகவேண்டும் இல்லையெனில் என்ன ஆகும் என்று தெரியுமல்லவா..? அதிமுக, பாஜக என இரண்டு கட்சிகளுக்கும் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். மத்தியில் இருந்து பல திட்டங்கள் கொண்டுவந்தோம், மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதி பெற்றோம். ரயில்வே மேம்பாலங்கள் கொண்டுவந்தோம். காவிரி நீர் மாசு பட்டுள்ளது. அதை சுத்திகரித்து கொடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டத்தைக் கொண்டுவந்தோம். மத்திய அரசும் ஒப்புக்கொண்டு, இப்போது ஒப்புதல் கொடுத்துள்ளது. 11500 கோடி ரூபாய் ஒதுக்கி, முதற்கட்டமாக 950 கோடி ரூபாய் விடுவித்துள்ளனர். கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள்.. ஸ்ரீரங்கம் தொகுதியில் முக்கொம்பில் 400 கோடியில் தடுப்பணை கட்டினோம், அதை ஸ்டாலின் தொடங்கினார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 1500 கோடியில் 2 லட்சம் டன் உற்பத்தி செய்யும் திறன் தொழிற்சாலை கொண்டுவந்தோம். சேத்துராபட்டியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, ஸ்ரீரங்கத்தில் பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரி, மகளிர் தோட்டக்கலை கல்லூரி ஆராய்சி நிலையம், சட்டப்பல்கலைக்கழகம், அரசு தொழில்பயிற்சி நிலையம் எல்லாம் தொடங்கப்பட்டது. அந்தநல்லூர் மணிகண்டம், மணப்பாறை ஊராட்சியை சார்ந்த 212 ஊராட்சி பயன்பெறும் வகையில் 49 கோடியில் கூட்டுக்குடிநீர் பணிகள் நிறைவேற்றினோம். ரயில்வே மேம்பாலம், நேப்பியர் பாலம் கட்டப்பட்டது, ஸ்ரீரங்கநாத ஆலய சுற்றுப்புற சுவர் 33 கோடியில் சீரமைக்கப்பட்டது, அன்னதான திட்டம் கொண்டுவரபப்ட்டது, யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது, பஞ்சக்கரை அறிவியல் பூங்கா, 12 அம்மா மினிகிளினிக் எல்லாம் கொடுத்தோம். கொள்ளிடத்தில் ஸ்ரீரங்கத்தையும் நொச்சியத்தையும் இணைத்து இருவழி தரைப்பாலத்துடன் தடுப்பணை கேட்டிருக்கிறீர்கள். மல்லிகை பூ செண்டு தொழிற்சாலை போன்று பல கோரிக்கைகள் வைத்திருக்கிறீர்கள். இவை எல்லாமே நிறைவேற்றப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மிட்போம். பைபை ஸ்டாலின்” என்று முடித்தார். க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0