இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட்டு விவசாயிகளை பாதுகாத்திட தமிழக அரசை வலியுறுத்தி ஜனவரி 20ல் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் - பி ஆர்.பாண்டியன் அறிவிப்பு
இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட்டு விவசாயிகளை பாதுகாத்திட தமிழக அரசை வலியுறுத்தி ஜனவரி 20ல் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் - பி ஆர்.பாண்டியன் அறிவிப்பு
மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கு எதிராக விவசாயிகள் பங்கேற்கும் போராட்டக் குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எஸ்.ஆர். கமலக்கண்ணன் தலைமையேற்றார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் வேளாண்மை துறை,சுற்றுச்சூழல் துறை தனித்தனியே அரசாணைகள் வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து காவிரி டெல்டாவில் இருந்து ஓஎன்ஜிசி துரப்பண பணிகளுக்கான இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டது. வெடிவைத்து ஆய்வு செய்வது தடுத்து நிறுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் பேரழிவு பெரியகுடி கிணறை திறப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மறைமுகமாக ஓஎன்ஜிசி தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு துணை போவதாக ஊழியர்களே தெரிவிக்கிறார்கள்.
தற்போது ஆந்திராவில் இதைவிட அடர்த்தி குறைவான கிணறு தீப்பற்றி மூன்று தினங்களாக எரிந்து வருகிறது. மிகப் பெரும் பேரழிவு ஆந்திரா சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஆசியாவிலேயே மிக அடர்த்தியான ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு பெரியகுடி கிணறு ஆகும். இவற்றில் இருந்து எரிவாயு எடுப்பதற்கான மறைமுக நடவடிக்கையை மேற்கொள்ளும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவும் பேரழிவை சந்திக்கும். பேராபத்து ஏற்பட்டுள்ளது.
ஓஎன்ஜிசி செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக மண்ணியல் போராளி சுல்தான் இஸ்மாயில் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆய்வு குழுவை அமைத்தது. ஆனால், இதுவரையிலும் ஆய்வுக்குழு அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால் மிகப்பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட்டு காவிரி டெல்டாவை பாதுகாப்பதோடு, ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை தடுத்து நிறுத்தி பாதுகாத்திட வலியுறுத்தி வருகிற ஜனவரி 20ஆம் தேதி பெரியகுடியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டம் தொடர உள்ளோம்.
இதற்கான வகையில் சேந்தமங்கலம், பெரியகுடி, இருள்நீக்கி விக்கிரபாண்டியம் பள்ளிவர்த்தி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 25 பேர் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டது என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி, வடக்கு ஒன்றிய தலைவர் எஸ் வி கே சேகர், விக்கிரபாண்டியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ் சங்கர்,கோட்டூர் ரத்தினசாமி, இராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0