புத்தாண்டு பிறப்பு : திருச்சி கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு : திருச்சி கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்சி கோயில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டில் தொடங்கும் காரியங்கள் யாவும் சித்தி பெறவேண்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலின் மேல் செல்ல முடியாதவர்கள் கீழே வீற்றிருக்கும் மாணிக்க விநாயகர் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முழுமுதற் கடவுளை வழிபட்டு, விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
மாணிக்க விநாயகர் மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்து வருகிறார்.
மேலும் கடந்த காலங்களிலிருந்த கஷ்டங்கள் நீங்கி பிறந்திருக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் நன்மை தரும் ஆண்டாக அமைய பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி, மட்டுவார் குழலம்மை உடனாய ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை, உச்சியில் விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை என மூன்று பகுதிகளாக மலை அமைந்துள்ளதும், கயிலாய மலைக்குக்கு நிகரான மலை இது என்பதால் இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர்.
இப்படி பிரசித்தி பெற்ற உச்சி பிள்ளையார் கோயிலில் இன்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் மனமுருக வழிபட்டனர்.
இதேபோல் திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், நீதிமன்றம் அருகே அமைந்துள்ள ஐயப்பன் திருத்தலம் என திருச்சியின் முக்கிய திருத்தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0