சொர்க்கவாசல் நிகழ்வின்போது திடீர் மின் தடை; இருளில் நின்ற நம்பெருமாள்:போலீஸாருக்கிடையே தள்ளுமுள்ளு; பக்தர்கள் அதிருப்தி; ஆட்சிக்கு அபசகுணமா?
சொர்க்கவாசல் நிகழ்வின்போது திடீர் மின் தடை;
இருளில் நின்ற நம்பெருமாள்: போலீஸாருக்கிடையே தள்ளுமுள்ளு
பக்தர்கள் அதிருப்தி; ஆட்சிக்கு அபசகுணமா?
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
இத்தகைய சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச.19-ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கியது. மறுநாள் (டிச.20) பகல்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று நடைபெற்றது.
அதற்காக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளினார்.
உள்பிரகாரங்களில் வலம் வந்து, திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி வந்து அதிகாலை 5.45 மணிக்கு தனுர் லக்னத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்தார்.
அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் "ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா.." என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டவாறு நம்பெருமாளை பின்தொடர்ந்து சொர்க்கவாசலை கடந்துச் சென்றனர்.
அதன்பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் முன்புள்ள திருகொட்டகையில் பக்தி உலாத்துதல் என்ற நம்பெருமாள் பிரவேசம் கண்டருளினார்.
இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் கோயில் முழுவதும் பக்தர்களை கட்டுப்படுத்துவதாகக்கூறி போலீஸாரே பல்வேறு நெரிசல்களை ஏற்படுத்தி பக்தர்களை முகம் சுழிக்க வைத்தனர்.
சொர்க்கவாசல் நிகழ்ச்சியை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.700, ரூ.4000 என இரு பிரிவுகளில் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்திருந்தனர். அதேபோல், உபயதாரர், கட்டளைதாரர், கோயில் ஊழியர்கள், பிறதுறை அத்தியாவசிய பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு கலர்களில் சிறப்பு அனுமதி பாஸ் வழங்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட பாஸ்க்கு ஏற்றவாறு கோயில் உள்ளே செல்ல வழிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், பாதுகாப்பு என்ற பெயரில் பாஸ்க்களை அணிந்து வந்தவர்களை அலைக்கழிக்க வைத்தனர் காவல்துறையினர். இதனால் பாஸ் அணிந்து வந்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்ட பிறகே கோயிலுக்குள் சிறப்பு அனுமதி பாஸ் வைத்திருந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுஒருபுறம் இருக்க கோயிலுக்குள் பாதுகாப்புக்காக இருந்த போலீஸார் ரெங்கநாத சுவாமி புறப்பாட்டின்போது இருபுறமும் கயிறு பிடித்து நின்றவர்களாலேயே பெரும் நெரிசல் ஏற்பட்டது. சிறப்பு அனுமதி பாஸ்கள் வைத்து புறப்பாட்டில் கலந்துக்கொண்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ரெங்கநாத சுவாமிக்கு முன்னும், பின்னும் போலீஸாரே குவிந்து இருந்ததால் பக்தர்கள், பொதுமக்கள் பெருமாளுக்கு பின்னர் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதனால் பெருமாள் புறப்பாட்டின்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமைச்சர் அமைதியாக இருந்தாலும், போலீஸார் பாதுகாப்பின் உச்சமாக கமிஷனரை சுற்றி 50 பேரும், துணை காவல் ஆணையர்களை சுற்றி 50 பேரும் என பக்தர்கள் கூட்டத்தின் நடுவே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர். உயரதிகாரிகள் அவ்வப்போது அங்கும் இங்கும் செல்லும்போது அவர்களுக்கு வழி ஏற்படுத்தித் தருவதாகக்கூறி பொதுமக்களை பிடித்து தள்ளிக்கொண்டிருந்தனர். இந்த போலீஸார் அதிகாரிகள் பின்னால் ஓடுவதும், வலம் வருவதுமாய் இருந்ததால் பெருமாளுக்கு பாதுகாப்புக்காக வந்தார்களா, உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்புக்கு வந்தார்களா என பும்பித்தள்ளினர். மொத்தத்தில் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பின்போது போலீஸாரின் தலைகள் மட்டுமே அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நடுவில் பெருமாள் வருவதுதான் வழக்கம் என்ற நிலை மாறி போலீஸார் மத்தியில் பெருமாள் கொண்டு செல்லப்பட்டது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சொர்க்கவாசல் நிகழ்வுக்கு கோயில் நிர்வாகத்தால் அச்சடிக்கப்பட்ட பாஸ்கள் கொண்டு வந்த அனைவரின் பாஸ்களும் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே கோயில் உள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறப்பு தரிசன அனுமதி டிக்கெட்டில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொண்டு வந்தது போலி என கண்டறியப்பட்டு, பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்ட பாஸ்க்கு இணையாகவே டூப்ளிகேட் பாஸ்கள் எப்படி அச்சடிக்கப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதேபோல், ரூ.700 மதிப்புடைய டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் பல ஆயிரங்களுக்கும், ரூ.4000 மதிப்புடைய டிக்கெட்டுகள் ரூ.20 ஆயிரத்திற்கும் தனி நபர்களால் விற்க்கப்பட்டது பெரும் சோதனைதான்.
பெருமாள் பரமபத வாசலில் போலீஸாரின் தள்ளுமுள்ளு காரணத்தால் உயர்நீதிமன்ற நீதிபதி ஓருவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். போலீஸார் கயிறு பிடித்து அவர்களுக்குள்ளாவே தள்ளு முள்ளில் ஈடுபட்டதைப்பார்த்த பொதுமக்கள் ஒன்னும் சொல்றதற்கில்லை என நகைத்துக்கொண்டிருந்தனர்.
போலீஸார் மத்தியில் பரமபத வாசலை திறந்து வெளியே சென்ற பெருமாளுக்கும், பொதுமக்களுக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் கடந்து ஆயிரங்கால் மண்டபத்தின் முன்புள்ள திருகொட்டகையில் விடிய விடிய மணல் வெளியில் காத்திருந்த பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மணல் வெளியில் பக்தர்களை தேடிச்செல்லும் பக்தி உலாத்துதல் என்ற நம்பெருமாள் பிரவேசம் கண்டருளியபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நடுவே இருந்த பெருமாள் இருளில் மூழ்கினார். இதனால் பக்தர்கள் கோயில் பணியாளர்கள் கூச்சலிட்டனர். சிலர் கோவிந்தா கோவிந்தா என தத்தம் செல்போன்களை டார்ச்சாக பிடித்தனர். நம்பெருமாள் பக்தி உலாத்தலில் உற்சவருடன் இருந்த தலைமை பட்டர் சுந்தர் பட்டர் பெருமாளின் திருவாபரணங்கள் மீது இரு கைகளையும் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினார். இந்த மின் தடையால் மணல் வெளியில் பெரும் பதட்டம் நிலவியது. அந்தப்பகுதி முழுவதுமே இருளில் மூழ்கியதால், குழந்தைகள், பெரியவர்கள் அவதிக்குள்ளாகினர்.
கடந்த பல ஆண்டுகளாக சொர்க்கவாசல் நிகழ்வில் கலந்துக்கொண்டவர்கள், இந்தாண்டு சொர்க்கவாசல் திறந்து வெளியே வந்த பெருமாள் இருட்டில் மூழ்கியதைக்கண்டு அபசகுணமாக இருக்கே என்றும், ஆளும் கட்சிக்கு இது வரும் காளங்களில் அபசகுணமாகவே இருக்கும் என்றும் புலம்பியதை பார்க்க முடிந்தது. இதுவரை இப்படியான மின் தடை என்பது சொர்க்கவாசல் திறப்பு வரலாற்றிலேயே நிகழ்ந்ததே இல்லை என்றும், இந்தாண்டு இருட்டில் பெருமாள் நின்றது பக்தர்கள் மத்தியில் பதபதைப்பை ஏற்படுத்தியது.
பின்னர் சில நிமிடங்கள் கழித்து மின் விளக்குகள் மீண்டும் எரியத்துவங்கின. அதன்பின்னர் மீண்டும் பக்தர்களைத்தேடி பெருமாளில் பக்தி உலாத்துதல் நடைபெற்றது. பரமபத வாசல் திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு நம்பெருமாள் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் மின் தடை ஏற்பட்டது பக்தர்கள் மத்தியில் பேசும்பொருளாக இருந்தது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0