வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்
வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இயேசு பிறப்பு நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலகளவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கீழை நாடுகளில் "லூர்து நகர்" என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. மேலும் " பசிலிக்கா" என்ற அந்தஸ்து பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு ஏசு பிறப்பு நிகழ்ச்சி இங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு விண்மீன் ஆலய
வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின்விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பேராலயத்தை சுற்றி அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு 11:30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலய பங்குதந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதைதொடர்ந்து குழந்தை இயேசு சொருபம் வான தேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்பட்டது. சரியாக 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்குத்தந்தை அற்புதராஜ், அதனை அருகில் உள்ள குடிலில் வைத்து ஏசு பிறந்ததாக அறிவித்தார். அப்போது வான வேடிக்கைகள் விண்ணதிர்ந்தன. ஆயிரக்கணக்கானோர் இந்த திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், நிர்வாகத் தந்தை பரிசுத்தராஜ், உதவி பங்குத் தந்தை ஆரோஜேசுராஜ், நிர்வாக தந்தையர்கள், அருள் சகோதர சகோதரிகள், சகோதரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், மற்றும் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இரவு தொடங்கி இன்றும் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வேளாங்கண்ணி வந்திருந்தனர். இதனையொட்டி அங்கு நாகை மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0