பால்பண்ணையில் கடும் போக்குவரத்து நெரிசல் ; கனரக வாகனங்களை சுற்று வட்ட சாலையில் திருப்பி விட திட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

Dec 24, 2025 - 15:07
 0  84
பால்பண்ணையில் கடும் போக்குவரத்து நெரிசல் ; கனரக வாகனங்களை சுற்று வட்ட சாலையில் திருப்பி விட திட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ்

பால் பண்ணை போக்குவரத்து நெரிசல்;  கனரக வாகனங்களை மாநகர சுற்று சாலையில் திருப்பி விட திட்டம்-அமைச்சர் அன்பில் மகேஸ் 

திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தினசரி பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் காத்து கிடக்கும் சூழலும், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத பரிதாப நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது வருகிறது. பால்பண்ணை நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி நடைபெறும் தொடர் விபத்துகளால் அரியமங்கலம் காவல் சரகத்தில் மட்டும் கடந்த 11 மாத காலத்தில் 8 மனித உயிரிழப்பு துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இப்பகுதியில் பள்ளி - கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் ஊழியர்களும், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும் போக்குவரத்து நெரிசலில் அன்றாடம் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக, அனைத்து துறை அதிகாரிகளையும் நேரில் வரவழைத்து, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், சாலை விபத்துக்களை தடுப்பதற்காகவும் களத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் ; திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செந்தணீர்புரம் வரை உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் புதிய தார் சாலை அமைத்து கூடுதலாக மாற்று சாலைகளை உருவாக்குவது, சாலையை கடந்து செல்பவர்களுக்கு ஏதுவாக நடைபாதை சிக்னல் அமைப்பது, வெளிச்சம் குறைவான பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்க கூடுதல் மின் விளக்குகளை அமைப்பதற்கும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது அவற்றை புதுப்பிப்பது, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் பகல் வேலைகளில் கனரக வாகனங்களை துவாக்குடியில் இருந்து மாநகர சுற்றுச்சாலை வழியாக திருப்பி விடுவது, பால்பண்ணையில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலத்தின் அருகே இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகளை நேரில் வரவழைத்து ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆலோசனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும் சோதனை முறையில் படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 இந்த ஆய்வுப் பணியின் போது, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் தெற்கு ஈஸ்வரன், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடராஜன், சுரேஷ் பாபு, மாநகராட்சி துணை ஆணையர் வினோத், உதவி ஆணையர் சரவணன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெகஜீவ ராமன், வட்டாட்சியர்கள் விக்னேஷ், தனலட்சுமி மண்டலக்குழு தலைவர் மு.மதிவாணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அரசு அதிகாரிகளும் தன்னார்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0