எதிர்கட்சி கூட்டணியில் எத்தனை கட்சிகளை சேர்த்தாலும் எங்களுக்கு போட்டி நாங்கள் செய்யும் திட்டங்களை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் -பியூஸ் கோயல் வருகை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்

Dec 24, 2025 - 10:45
 0  5
எதிர்கட்சி கூட்டணியில் எத்தனை கட்சிகளை சேர்த்தாலும் எங்களுக்கு போட்டி நாங்கள் செய்யும் திட்டங்களை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் -பியூஸ் கோயல் வருகை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்

எதிர்கட்சி கூட்டணியில் எத்தனை கட்சிகளை சேர்த்தாலும் எங்களுக்கு போட்டி நாங்கள் செய்யும் திட்டங்களை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் -பியூஸ் கோயல் வருகை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாநகர கல்வியாளர்கள் அணி சார்பாக சிறந்த கல்வியாளர் சாதனை விருதும் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்வியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் குணசீலன், மாநகர அணி அமைப்பாளர் பொன்முடி‌ ஆகியோர் தலைமை வகித்தனர். 

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கல்வியாளர் அணி மாநில செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநகரக் கழக செயலாளர் மண்டலக்குழு தலைவர் மு. மதிவாணன் மாநிலங்கள்ளவை உறுப்பினர் உறுப்பினர் கவிஞர் சல்மா, மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதி கழகச் செயலாளர் மணிவேல், மாவட்ட மாநகர கல்வியாளர் அணியின் துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர பேரூர் வட்டக் கழகச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பிற அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,

நீதிகட்சி காலத்திலிருந்து கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்கு வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சிக்கின்றது.

கையெழுத்து போட்டால் தான் அடுத்த நிமிடம் பணம் வரும் என்று மிரட்டுகிறார்கள்.

மத்திய அரசின் கொள்கையை ஒத்துக்கொண்டு பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் அது எங்களுக்கு தேவையில்லை என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

நமக்கு வர வேண்டிய நிதி தந்திருந்தால் நாம் இன்னும் எவ்வளவு சாதித்து இருக்க முடியும். எல்லா துறையிலும் வளர்ச்சி பெற்ற துறையாக நம் தமிழக அரசு உள்ளது. 2026 தேர்தலில் இது எப்படி பிரதிபலிக்கும் என்று பார்க்கத்தான் போகிறீர்கள் என்றார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், அண்ணாவின் கொள்கையை அடகு வைத்தால் தான் நீங்கள் தர வேண்டிய நிதியை பெற வேண்டுமானால் அது எங்களுக்கு தேவை இல்லை என முதல்வர் உறுதியாக கூறியுள்ளார்.

கல்வி நமக்கு மறுக்கப்பட்டது, மறுக்கப்பட்ட வாய்ப்புகளை பெற நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி திமுக ஆட்சி வரை உழைத்து கொண்டு கல்வியை நமக்கு ஆயுதமாக்கி வருகிறோம்.

குக்கிராமத்தில் பிறந்த என்னை உங்கள் முன் பேச வைத்தது கல்வி தான், அந்த கல்வியை கொடுத்தது திராவிட இயக்கம் தான் என்றார்.

தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கும் 24 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 24 கல்லூரி பேராசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது ,

பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக தான். மாணவர்கள் மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது. தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 7898 வகுப்பறைகள் கட்டி வருகிறோம்.

பள்ளிகளில் பாழடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் சமுதாய கூடத்திலோ அல்லது வாடகை கட்டிடங்களிலோ மாணவர்கள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி நிதியை பெற வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஒன்றிய அரசு கல்வியில் 20 நோக்கத்தை அடைய வேண்டும் எனக் கூறுகிறார்கள், அதில் நாம் 19 அடைந்து விட்டோம் .கேரளா இருபதையும் அடைந்து விட்டது.

ஆனால், இந்த இரு மாநிலங்களுக்கு தான் கல்வி நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறார்கள். 

கல்வியிலும் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. இருந்த போதும் முதலமைச்சர் கல்விக்கான நிதியை நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அதை வழங்கி வருகிறார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பில் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார்.

அரசு பள்ளிகளில் டெண்டர் விடுவது நடைமுறையில் உள்ளது, விரைவில் டெண்டர் விடப்படும், தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

ஜாக்டோ ஜியோ ஜனவரி 6 ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். நேற்று இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளார்கள்.

 ஜனவரி 6ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் தெரிவிப்பார்.

ஒன்றிய அரசு நமக்கான நிதி கொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம், இருந்தபோதும் அவர்களுக்காக நல்ல செய்தி நிச்சயம் வரும்.

திமுகவில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும், மூத்தவர்களின் ஆலோசனைகளும் எங்களுக்கு தேவை என்கிற அடிப்படையில் தான் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பேசி உள்ளார். இளைஞரணி செயலாளரான அவருக்கு இந்த உரிமை உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த பியூஸ் கோயில் வந்துள்ளார், அந்த கூட்டணி பலப்பட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்குமா என்கிற கேள்விக்கு, எங்களுக்கு போட்டியே திராவிட மாடல் 2.0-வில் நாங்கள் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தான். தற்போது மேற்கொள்ளும் திட்டங்களை காட்டிலும், அதில் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் போட்டியே என்றார்.

அடுத்து பேசிய எம். பி தமிழச்சி தங்கபாண்டியன், நான் ஆண்டாள் வேடம் போட்டது ஒரு நடனத்திற்காகத்தான். என்னை குறித்து அறிந்தவர்களுக்கு என்னை நன்றாக தெரியும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு பதில் எதுவும் கூற முடியாது என்றார்.

முன்னதாக, கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் தென்னலி ஈஸ்வரன் வரவேற்க, மாநகர தலைவர் பேரா.சதீஷ்குமார் (எ) ஆ.நிறைசெல்வன் நன்றியுரை ஆற்றினார்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0