கோவை வந்தார் விஜய்; ஈரோட்டில் அதிகாலை முதல் காத்திருக்கும் தொண்டர்கள்

Dec 18, 2025 - 10:11
Dec 18, 2025 - 11:41
 0  55
கோவை வந்தார் விஜய்; ஈரோட்டில் அதிகாலை முதல் காத்திருக்கும் தொண்டர்கள்

ஈரோடு மாநகரில் விஜய் பொதுக் கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடு : அதிகாலை முதல் காத்திருக்கும் தொண்டர்கள் கோவையில் இருந்து ஈரோடு புறப்பட்ட விஜய் 

ஈரோடு பெருந்துறையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என்று கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.

தொண்டர்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்பு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் தவெக பொதுக்கூட்டம் என்பதால், கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்குப் பின்பு, தமிழகத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்கவில்லை. உள்ளரங்கங்களில் நடந்த கட்சி நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றார்.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதியன்று புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் பேசினார். ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின், இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் என்ற பகுதியில் நடக்கும் தவெக பொதுக்கூட்டத்தில் தான் விஜய் பங்கேற்றுப் பேசவுள்ளார். இந்த கூட்டத்துக்கு அனுமதியளிப்பதற்கு காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்திருந்தது. இன்று காலை 11 மணிக்குத் துவங்கி பிற்பகல் 1 மணியளவில் இந்த கூட்டம் நிறைவுபெறவுள்ளது. விஜய்யை காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மார்கழி பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே மைதானத்தில் குவிந்துள்ளனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த இடம், கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியை ஒட்டியே அமைந்துள்ளது. கொங்கு குறுப்பு நாட்டு படைத்தலை வேளாளர் சங்கம் என்ற அமைப்புக்குச் சொந்தமான விஜயமங்களம் ஸ்ரீவிஜயபுரி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்த விஜய் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். அவர் பயணிப்பதற்கு மூன்று சொகுசு கார்கள் விமான நிலையத்தில் இருந்த நிலையில் கருப்பு நிற சொகுசு காரில் விமான நிலையத்திலிருந்து ஈரோடு புறப்பட்டார் . விமான நிலையத்தில் குவிந்துள்ள தொண்டர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0