மதுரையில் வேலு நாச்சியார் பெயரில் ரூ.150 கோடியில் மேலமடை மேம்பாலம்: முதல்வர் திறந்து வைப்பு
மதுரையில் வேலு நாச்சியார் பெயரில் ரூ.150 கோடியில் மேலமடை மேம்பாலம்: முதல்வர் திறந்து வைப்பு
மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை இன்று திறந்து வைத்தார்.
மதுரை - தொண்டி சாலை, மதுரை மாவட்டத்தையும் சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாகத் திகழ்கிறது. அண்ணா பேருந்து நிலையம், ஆவின் சந்திப்பு மற்றும் மேலமடை ஆகிய பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளதால், இப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகக் காணப்பட்டது.
குறிப்பாக, பீக் ஹவர்ஸ் எனப்படும் நெரிசல் மிகுந்த நேரங்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மேலமடை சந்திப்பு, ஆவின் சந்திப்பு மற்றும் அண்ணா பேருந்து நிலையப் பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ‘திவா. நாத் இந்தியா ப்ராஜக்ட்ஸ்’ நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டது. கடந்த 30.10.2023 அன்று இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், அதாவது பணிகள் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் மிக விரைவாகப் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்: மேலமடை சந்திப்பில் மையத் தடுப்புடன் கூடிய 4 வழித்தட சாலை மேம்பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. 25 தூண்கள் தாங்க, மொத்தம் 950 மீட்டர் நீளத்திற்கு இப்பாலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் 7.5 மீட்டர் அகலத்தில் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆவின் சந்திப்பு முதல் அப்பல்லோ சந்திப்பு வரை இருந்த திறந்தவெளி வாய்க்கால் மீது, நில எடுப்பு செய்யாமலேயே நவீன தொழில்நுட்பத்தில் (Macro Drain) 900 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இடதுபுற சேவைச்சாலை அமைக்கப்பட்டிருப்பது இத்திட்டத்தின் முக்கிய தொழில்நுட்பச் சாதனையாகும்.
மேலும், அண்ணா பேருந்து நிலையம் முதல் ஆவின் சந்திப்பு வரை நில எடுப்பு செய்யப்பட்டு சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகள் பாதுகாப்பாகச் செல்ல நடைமேடைகள், பேருந்து நிறுத்தங்களுக்குத் தனி இட வசதி, மேம்பாலம் மற்றும் சேவைச் சாலையில் நவீன மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பயன்கள்: இந்தப் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம், மதுரை - தொண்டி சாலையில் கோரிப்பாளையம் முதல் ரிங் ரோடு வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். ஆவின் சந்திப்பு மற்றும் மேலமடை சந்திப்புக்குக் கீழே ரவுண்டானா அமைக்கப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளதால், சிக்னல் இல்லா பயணத்தை (Signal-free) பொதுமக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0