ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்ததும் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறைக்கு வரும் - அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்

Dec 4, 2025 - 16:23
Dec 4, 2025 - 17:16
 0  40
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்ததும் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறைக்கு வரும் - அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்ததும் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறைக்கு வரும் - மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து சேவை துவக்க விழாவில் அமைச்சர் சிவசங்கர் 

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நான்கு இடங்களில் இருந்து அரசு பேருந்துகளை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட் திருச்சி மண்டலம் மூலம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணாக்கர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள் மட்டும் எளிதாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா நகரப் பேருந்து கீழ்கண்ட வழித்தடங்களில் இயக்கம் செய்யப்படுகிறது. 

அதன்படி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு போலீஸ் காலனி, சோழமாநகர், சோழமாதேவி வழியாக திருவெறும்பூர் முக்குலத்தோர் மேனிலைப் பள்ளிக்கு செல்லும். அதே போல் மாலை 4.30மணிக்கு முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு அண்ணா நகர் வந்தடையும்

அடுத்து, திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் காலை 8.00 மணிக்கு புறப்பட்டு திருச்சி இபி ரோட்டில் உள்ள வைகவுண்ட்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை செல்லும். மாலை 4.30 மணி வைகவுண்ட்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து இபி ரோடு வழியாக மீண்டும் திருவெறும்பூர் வந்தடையும்.

அடுத்து காட்டூர் பாப்பாக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு மரக்கடை சையது முர்துஸா மேல்நிலைப்பள்ளி வரை சென்று, மாலை 4:30 மணிக்கு பள்ளியிலிருந்து கிளம்பி காட்டூர் பாப்பாகுறிச்சி வந்தடையும்.

அதேபோல், பால்பண்ணை நால்ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்துகாலை 8 மணிக்கு புறப்பட்டு தெப்பகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வரை செல்லும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு தெப்பக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு பால் பண்ணை அரியமங்களம் வந்தடையும். அதன் தொடக்க விழா நான்கு இடங்களிலும் இன்று காலை நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், புதுக்கோட்டை மண்டல பொது மேலாளர் முகமது நாசர், துணை மேலாளர் தொழில்நுட்பம் புகழேந்தி ராஜ், பெரம்பலூர் கோட்ட மேலாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில் தமிழக போக்குவரத்துதுறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வரை புதிய வழித்தடங்களில் பேருந்துகளை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; பள்ளி கல்லூரிகளுக்கு தேவையான கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நிலை அறிந்து, அவர்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.

அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு என தனியாக சிறப்பு பேருந்து வேண்டுமென தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்தார். 

அதன்படி, சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தி தமிழக துணை முதல்வரின் உத்தரவின்படி, கடந்த மாதம் சென்னையில் உள்ள 85 பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.இ ந்த திட்டம் தமிழகம் முழுவதும் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதனையடுத்து, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் இருந்து திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி வரை செல்லும், அதேபோல் மாலை திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு நவல்பட்டு அண்ணா நகர் வந்தடையும்.

அதேபோல் திருவெறும்பூரில் நான்கு இடங்களில் இன்று முதல் இயக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் எங்கெங்கு பேருந்துகள் கூடுதலாக தேவை என்பதை ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதந்தோறும் மின்கணக்கீட்டு முறை செயல்படுத்துவதற்கு தற்பொழுது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அது நிறைவடைந்த பிறகு மாதாந்திர மின் கணக்கீடு முறை நடைமுறைக்கு வரும்.

மேலும், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்பொழுது 3000 பேர் நிரப்பப்பட உள்ளனர் என தெரிவித்தார். 

இந்த விழாவில் திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0