சாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? சாதி என்பது வேர், தீண்டாமை என்பது கிளை; Caste is abolished என்று சட்டம் செய்ய வேண்டும்-திருச்சியில் கி.வீரமணி

Nov 27, 2025 - 13:06
Nov 27, 2025 - 15:23
 0  15
சாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? சாதி என்பது வேர், தீண்டாமை என்பது கிளை; Caste is abolished என்று சட்டம் செய்ய வேண்டும்-திருச்சியில் கி.வீரமணி

சாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? சாதி என்பது வேர்; தீண்டாமை என்பது கிளை Caste is abolished என்று சட்டம் செய்ய வேண்டும்-திருச்சியில் கி.வீரமணி

 

இலால்குடி திராவிடர் கழகம் சார்பில், சாதி ஒழிப்பு போராட்டத்தின் 69 ஆம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்க மாநாடு மற்றும் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா லால்குடி பெரியார் திருமண மாளிகையில், சட்ட எரிப்பு வீரர்கள் நன்னிமங்கலம் கணேசன், இடையாற்று மங்கலம் தேவ சகாயம் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிக்கு லால்குடி மாவட்ட தலைவர் வால்டேர் தலைமை வகித்தார். லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து அனைவரையும் வரவேற்றார். 

நிகழ்வில் திராவிட கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் அரசியல் சட்ட எரிப்பு போராட்ட போராளிகள் மருதை, கணேசன், அங்கமுத்து, பிலவேந்திரன், கோவிந்தன், மைக்கேல் உள்ளிட்டோரின் திரு உருவப் படங்களை திறந்து வைத்து, அவர்களது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி கௌரவித்தார்.

சாதி ஒழிப்புக்கு செயலாற்ற வேண்டிய களங்கள் குறித்த கருத்தரங்கத்தை பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமை ஏற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சாதி ஒழிப்புக்கு செயலாற்ற வேண்டிய களங்கள் ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தலும் பாதுகாத்தலும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சுப்பிரமணியன், தர்மராஜ், பிச்சை, அரங்கநாயகி, குழந்தை தெரசா, மணிவாசகம், முத்துசாமி, ஆசைத்தம்பி, பாலசுப்ரமணியன்,சித்தார்த்தன்,அதிரடி அன்பழகன்,பூவை புலிகேசி, தேவ நர்மதா,மதிவதனி, பெரியார் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று சாதி உழைப்புக்கு செயலாற்ற வேண்டிய களங்கள் குறித்து பேசினர்.

 

பின்னர், செம்பழனியில் தொடங்கி கீழவாளாடி வரையிலும் சாதி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், அதைத் தொடர்ந்து கீழவாளாடி பத்மாவதி பேலஸ் அரங்கில் கருத்தரங்கு மற்றும் மருத்துவ முகாம்கள், கலை நிகழ்ச்சிகள், தோழர் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அன்பு ராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக செயலவை தலைவர் வழக்கறிஞர் வீரபர்த்தினி, கழகத்தின் பொதுச்செயலாளர் வி அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு, பெரியார் தலைமை செயற்குழு உறுப்பினர் அரியலூர் சிந்தனைச் செல்வன், திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், திராவிடர் கழக துறையூர் மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன், திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், இலால்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் செல்வி இணைப்புரை வழங்கி சிறப்பித்தார். 

பின்னர் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு பெரியார் 10 தீர்மானங்களை முன்மொழிந்தார்.  

இலால்குடி பகுதி திக்க தலைவர் வால்டேர் தமது குடும்பத்தினர் சார்பாக பெரியார் உலகம் நிதியாக ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரான குழந்தை தெரசா, அமிர்த கணேஷ், நாத்திகா, அறிவுக்கரசி, ஆலன், பெரியார் பிஞ்சு சித்தார்த், பெரியார் பிரைன் உள்ளிட்டோர் நிதி வழங்கினர். முன்னதாக பெரியார் பிஞ்சு சித்தார்த் ஆசிரியர் முன்னிலையில் உரையாற்றி பாராட்டு பெற்றார். 

அதைத் தொடர்ந்து திராவிடர் கழக தலைவரின் 93 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு எடைக்கு எடை 5 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன. இறுதியாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாநாட்டுக் கருத்தரங்கத்தின் நிறைவுரையை வழங்கினார். அவர் தமது உரையில், அம்பேத்கர் பாதிக்கப்பட்டார். அதனால் சிந்தித்தார். பெரியார் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் சிந்தித்தார் என்றும், சாதி இல்லாமல் தீண்டாமை எப்படி வரும்? என்ற கேள்வியை பெரியாரும் அம்பேத்கரும் ஒன்று போலக் கேட்டனர் என்றும், Untouchability is abolished என்பதற்கு பதிலாக Caste is abolished என்று சட்டம் செய்யும் வரை நமது பயணங்கள் தொடரும்.

இலால்குடியில் மட்டும், தந்தை பெரியார் அறிவித்த சாதி ஒழிப்புப் போரில் 360 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். சாதி ஒழிப்பு என்பது எவ்வளவு கடுமையான பணி என்பதைச் சுட்டிக்காட்ட, ’கண்ணுக்குத் தெரியாத எதிரி’ என்று ஜாதியை சித்தரித்தார். அதனால்தான் பெரியார் மூலத்திற்கே சென்று போராடினார். அப்படி மூலத்திற்கே செல்லும் போது தான் சாஸ்திர சம்பிரதாயங்கள் வந்தன. மதம் வந்தது. கடவுள் வந்தது. அனைத்தையும் தூக்கிப்போடு என்றார். அதனால் தான் ஜாதியின் தாக்கம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. இன்னமும் நமது பயணம் உள்ளது. மேலும், அதாவது, சாதி ஒழிப்புப் போரை காமராசர் முதல்வராக இருக்கும் போதுதான் அறிவிக்கிறார். காமராசர் தலைமையிலான அரசுதான் சட்ட நகலை எரித்தால் மூன்றாண்டு சிறை என்று சட்டம் செய்கிறது. ஆனாலும் பெரியார் ஒரு கையில் காமராசர் ஆட்சியை பாதுகாத்துக்கொண்டும், இன்னொருகையில் அரசியல் சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தையும் நடத்தினார் என்று சொல்லிவிட்டு, “இப்படி ஒரு முதிர்ச்சியை உலகில் எந்தத் தலைவரிடத்தும் காணவியலாது என்று வியந்து, அடுத்தபடியாக அதனினும் அதிக வியப்பு தரும் கருத்தை முன்வைத்தார். அதாவது, பெரியாரின் தொண்டர்களில் ஒருவராவது கைதாகும் போது, ‘காமராஜர் ஆட்சி ஒழிக’ என்று முழங்கவே இல்லை. இது எப்படிப்பட்ட கட்டுப்பாடு. இதுபோன்ற ஒரு தலைவர் ஒரு இயக்கம் இருக்குமா? என்று வியந்தார். தோழர்களையும் வியக்க வைத்தார். 

பார்ப்பனர் வீட்டில் சாதி மறுப்புத் திருமணம் நடந்தால் அவர்கள் கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்கிறார்களா? என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, பார்ப்பனரல்லாதாருக்கு மட்டும் இந்த சாதி வெறி எதற்கு? என்று கேள்வியைத் தொடுத்தார். மேலும் அவர், நாம் வெற்றிகள் பல பெற்றிருக்கிறோம். ஆனாலும் நமது இலக்கு சாதியற்ற, பாலியல் பேதமற்ற சமூகம். அதுவரையிலும் நமது பயணம் நிற்காது. என்ன விலை கொடுத்தாலும் சாதியை ஒழித்தே தீரவேண்டும். மூடநம்பிக்கைகளை தகர்த்தே தீரவேண்டும். அதற்கு ஏதுவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆணவக் கொலைகளுக்கு எதிரான விசாரணைக் கமிசனை அமைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் என்று கூறி உரையை நிறைவு செய்தார். இறுதியாக இலால்குடி பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் க.இளஞ்சேட்சென்னி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் அம்பிகா கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், துறையூர் மாவட்ட செயலாளர் சண்முகம், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் கோபால், விருதாச்சலம் மாவட்ட தலைவர் இளந்திரையன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குனர் செந்தில்குமாரி, மாநில இளைஞரணிச் நாத்திகப் பொன்முடி, மாநில மாணவனின் செயலாளர் செந்தூர பாண்டியன், கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0