சிதம்பரத்தில் மீண்டும் டுமீல்: போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி; சுட்டுப்பிடித்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர்
சிதம்பரம்: போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி; சுட்டுப்பிடித்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர்
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலைய போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற கஞ்சா வியாபாரியை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
கடந்த 21ஆம் தேதி இரவு 11 மணியளவில் TN 23 N 2399 என்ற எண் கொண்ட அரசு பேருந்து வேலூரில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி வந்துள்ளது.
அந்த பேருந்து பாண்டி- கடலூர் ஆள்பேட்டை செக் போஸ்ட் பகுதிக்கு வந்த போது கௌதமன், நடராஜன், திவான் ஆகிய காவலர்கள் பேருந்தை வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது பேருந்தில் இருந்த சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்(24), சந்துரு(19) ஆகியோர் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்த கடலூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கொடுத்த தகவலின்படி சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் மொத்த வியாபாரியாக செயல்படுவதாக தெரிவித்தனர். கடலூர் மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நேற்று வல்லம்படுகை பகுதியை சேர்ந்த மோகன் மகன் நவீன் (25), கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ராஜா மகன் கௌதம் (25), வல்லத்துரை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருள் என்கிற ஜெயக்குமார் (30) ஆகிய மூன்று பேரையும் உசுப்பூர் ரயில்வே கேட் பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் பிடித்தனர்.
கஞ்சா வியாபாரி நவீன்
அந்த சமயத்தில் நவீன் கத்தியை காட்டி தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் இரவோடு இரவாக நேற்று இரவு கஞ்சா வியாபாரி நவீனை கைது செய்தனர்.
இன்று (நவ.23)காலை 6 மணி அளவில் போலீசார் நவீனை அழைத்துக் கொண்டு அவர் மறைத்து வைத்த கஞ்சா மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய மாரியப்பா நகர் முட்புதர் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அவர் காவலர் ஐயப்பனை மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியால் வெட்டி விட்டு தப்ப முயன்றான். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியால் நவீனை வலது கால் முட்டியில் சுட்டு பிடித்தார்.
சுட்டுப் பிடிக்கப்பட்ட நவீன் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நவீனால் இடது கையில் வெட்டப்பட்ட காவலர் ஐயப்பனும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் ஐயப்பனை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார்; கடலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை கஞ்சா வழக்கில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட நவீன் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரிவித்தார்.
சிதம்பரம் பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே தமிழக போலீசார் ரவுடிசத்துக்கு எதிராக துப்பாக்கியை பயன்படுத்த முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0