எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப திமுகவினர் உதவுவதில் என்ன தவறு? - அமைச்சர் கே.என்.நேரு

Nov 14, 2025 - 11:46
 0  19
எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப திமுகவினர் உதவுவதில் என்ன தவறு? -  அமைச்சர் கே.என்.நேரு

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப திமுகவினர் உதவுவதில் என்ன தவறு? - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க வந்த அமைச்சர் கே என் நேரு, எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பித்தர மக்களுக்கு திமுகவினர் உதவுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு;

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு ரூ.406.63 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; திருச்சி மாவட்டத்தை பொறுத்த அளவு எஸ்.ஐ. ஆர் பணிகள் திருப்திகரமாக நடந்து வருகிறது. 

எல்லாரும் ஓட்டு போட வேண்டும் அதற்கான பணிகளை நாங்களும் செய்து வருகிறோம். சர்வர் குளறுபடி காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் 17 லட்சம் பேருக்கு இதுவரை விண்ணப்ப படிவங்களை கொடுத்துள்ளார். 3 மாதத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு எஸ்.ஐ.ஆர் பணிகளை இப்போது நடத்த வேண்டாம். தேர்தலை வைத்துக்கொண்டு எஸ்.ஐ.ஆர் பணிகளை நடத்துவது பயமாக இருப்பது அதற்காகத்தான் அனைத்து கட்சி கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து இப்போது நடத்த வேண்டாம் என தெரிவித்து வருகிறோம் .

எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்கு வாக்குச்சாவடி முகவர்கள் செல்லலாம் என தேர்தல் ஆணையமே அனுமதி கொடுத்துள்ளது. அதில் என்ன தவறு உள்ளது? மற்ற கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் வருவதை யாரும் தடுப்பதில்லை. படிவத்தை நிரப்பித் தர திமுகவினர் உதவுவதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவினர் உதவி செய்ய செல்லவில்லை என்றால் திமுகவினரும் செல்ல கூடாது என்று கூறினால் எப்படி? நாளை ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என்று எங்கள் மீதுதான் குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் சரியாகத் தான் இப்பணிகளை செய்து வருகிறோம்.

குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவரை 4.22 இரண்டு கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. புதிதாக ஒரு கோடியே 9 லட்சம் பேருக்கு கொடுத்துள்ளோம். புதிதாக மேலும் ஒரு கோடி பேருக்கு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

மத்திய அரசு ஜல்ஜீவன், நூறு நாள் வேலை திட்டம், மெட்ரோ, ஜிஎஸ்டியில் பங்கு என எதற்கும் நிதி ஒதுக்குவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 12 திட்டங்கள் நிதி ஒதுக்காததால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. அவர்கள் திட்டங்கள் கொடுத்தால் நாங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறோம்.

ஜல்ஜீவன் திட்ட மூலம் மத்திய அரசு ஒவ்வொரு பணிக்கும் இருபது சதவீதம் நிதி கொடுக்கும் அதில் முழுமையாக வராததால் எங்களால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை, அதன் மூலம் லோன் கிடைக்கும் அதனால் எங்களால் கூட்டு குடிநீர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. 

திமுக நல்லவர் போல் நடிப்பதை நாடே பார்த்து சிரிக்கிறது’ என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். விஜய்க்கு வேண்டுமானால் திமுக ஆட்சி, நல்லவர்கள் போல வேஷம் போடுவது போல தெரியலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு, திமுகவும், திமுக ஆட்சியும், முதல்வரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். திமுக நல்லவர் போல வேஷம் போடவில்லை. உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் முதல்வரை வரவேற்கிறார்கள். 

2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும். 210 தொகுதிகளில் வெல்வோம் என கூறும் அதிமுகவினர் மீதி உள்ள 20 தொகுதிகளை ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.

திருப்பதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து விமர்சிக்கிறார்கள். நான் பணம் கட்டுகிறேன். ஏன் கட்டக் கூடாதா? நான் திருப்பதி கோயிலுக்கு ரு.44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும். விமர்சனம் செய்பவர்கள் எல்லாரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா? என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் துறை அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0