திருச்சியில் முதல்வர்: போலீஸ் குடியிருப்பில் வாலிபர் படுகொலை; முதல்வர் சென்னைக்கு பறக்கும் முன்பே 5 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை
திருச்சியில் முதல்வர்: போலீஸ் குடியிருப்பில் வாலிபர் படுகொலை; முதல்வர் சென்னைக்கு பறக்கும் முன்பே 5 குற்றவாளிகளை தட்டித் தூக்கிய காவல்துறை
திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 8.20 மணி அளவில் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக வந்து அவரை ஐந்து பேர் கும்பல் அரிவாளுடன் வெட்ட துரத்தியது. அப்போது அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்றார். அவரை துரத்திச் சென்ற கும்பல் பீமநகர் காவலர் குடியிருப்பில் தஞ்சம் அடைய சென்றபோது மறித்து வெட்டியது. வெட்டுப்பட்ட தாமரைச் செல்வன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு காவலர் குடியிருப்புக்குள் உள்ளே ஓடினார்.
காவலர் குடியிருப்பின் ஏ பிளாக்கில் தில்லைநகர் எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் வீட்டுக்குள் ஓடினார். அவரைப்பின் தொடர்ந்து ஓடிய கும்பல் எஸ் எஸ் ஐ செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியது. இதில் தாமரைச் செல்வனின் தலை துண்டானது. வீட்டுக்குள் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
அப்போது காவலர் குடியிருப்பில் வசிக்கும் பிற போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றதில் ஒருவன் சிக்கினான். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கோட்டை உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பொதுமக்களால் விரட்டிப் பிடிக்கப்பட்ட இளமாறன் என்பவரை போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
தமிழக முதல்வர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சுற்றுப்பயணம் செய்த அதே நேரத்தில் இந்த கொலை சம்பவம் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையின் படி, பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கீழ தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு நடந்துள்ளது. நண்பர்கள் மத்தியில் சதீஷை தாமரைச்செல்வன் அடித்து அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சதீஷ் தனது நண்பர் பிரபாகரன் உள்ளிட்டோரிடம் தகவல் கொடுத்து இவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதன்படி இன்று காலை திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வனை, சதீஷ் உள்ளிட்ட 5 பேர் அரிவாளால் வெட்டியபோது காவலர் குடியிருப்புக்கு உள்ளே தப்பி ஓடி வந்து முதலில் தரைதளத்தில் இருந்த வீட்டின் உள்ளே ஓடியுள்ளார். அப்போதுதான் தில்லை நகர் எஸ் எஸ் ஐ செல்வராஜ் மகள் குப்பையை கொட்டி விட்டு வந்தபோது தாமரைச்செல்வன் உயிரை காப்பாற்ற வீட்டில் உள்ளே வந்துள்ளார்.
ஐந்து பேரும் பின் தொடர்ந்து வந்தபோது குடும்பமே இவர்களை உள்ளே விடாமல் கதவை அடைக்க முற்பட்ட நிலையில், கதவைத் தள்ளி உள்ளே சிறு குழந்தைகள், சிறப்பு உதவி ஆய்வாளர் முன்னிலையில் இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்து, தகவலறிந்த வடக்கு துணை ஆணையர் சிபின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளமாறன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரும் தலைமறைவாக இருந்தனர்.
இந்த நிலையில் பாலக்கரை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, முதல்வர் சென்னைக்கு பறக்கும் முன்பே பழிக்குப்பழி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், கணேஷ், நந்து, பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கொலை சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் தட்டி தூக்கி கைது செய்தது திருச்சி மாநகர காவல் துறை.
முன்னதாக, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுற்றுலா மாளிகையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்கி இருந்ததும், தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் தங்கியுள்ள நிலையில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
க. சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
1
Love
1
Funny
0
Angry
0
Sad
1
Wow
0