சிறுமி பாலியல் கொலை வழக்கு - தஷ்வந்தை விடுவித்தது உச்ச நீதிமன்றம்; காவல்துறை தலை குனிய வேண்டும்-அன்புமணி
தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் கொலை வழக்கு - தஷ்வந்தை விடுவித்தது உச்ச நீதிமன்றம்; காவல்துறை தலை குனிய வேண்டும் அன்புமணி
சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.
சம்பவம் நடந்த இரண்டே நாளில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தார்.
அதையடுத்து, பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் டிசம்பரில் செலவுக்குப் பணம் தரவில்லை என தாயை அடித்துக் கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பியோடினார்.
பின்னர், மும்பைக்கு விரைந்த தமிழக தனிப்படை போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தஷ்வந்த்தை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். தனது வாக்குமூலத்தில் தாயைக் கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்பட்டது.
மறுபக்கம், சிறுமி வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தூக்கு தண்டனையும், 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றமோ செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
அடுத்தபடியாக தஷ்வந்த் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.
தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதில் உரிய விளக்கமளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தஷ்வந்த்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, தஷ்வந்த் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் முக்கியமான சாட்சியான அவரின் தந்தை பிறழ் சாட்சியாக மாறினார்.
இதனால், செங்கல்பட்டு நீதிமன்றம் இந்தாண்டு ஏப்ரலில் போதிய ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த்தை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தது.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று, அவர் மீதான தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது.
நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், "தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை.
சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை.
எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும், இவ்வழக்கிலிருந்து தஷ்வந்த்தை விடுவிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
காவல்துறை பதில் என்ன?
முதலில் தாயைக் கொலைசெய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் ஆதாரங்கள் இல்லையென 5 மாதங்களுக்கு முன்பு தஷ்வந்த் விடுதலையானார். எனில், அவரின் தாயைக் கொலைசெய்தது யார்?
இப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லை, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என உச்ச நீதிமன்றமே தஷ்வந்த்தை விடுவித்திருக்கிறது.
அப்படியென்றால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது யார்? கீழமை நீதிமன்றத்தில் என்ன மாதிரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையின் பதில் என்ன?
மகளை இழந்த பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு தமிழக காவல்துறை என்ன செய்யப்போகிறது? விடையின்றியே நிற்கிறது இந்த கேள்விகள்!
முன்னதாக, 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த் , உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள், காவல்துறையினர் தலை குனிந்து நிற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தஷ்வந்த் விடுதலை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனித மிருகத்துக்குக் கூட தண்டனை பெற்றுத்தர முடியவில்லை என்றால் நமது சட்ட செயலாக்க அமைப்பும், வழக்கு நடத்துவதற்கான கட்டமைப்பும் எந்த அளவுக்கு பலவீனமாக உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதற்காக அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0