கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி; ரூ.10 லட்சம் நிவாரணம்: 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

Sep 28, 2025 - 01:20
 0  35
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி; ரூ.10 லட்சம் நிவாரணம்: 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி; ரூ 10 லட்சம் நிவாரணம்; நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு: இந்நிலையில், கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் நேரடி எண்: 04324 256306 வாட்ஸ் அப் எண்: 7010806322 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

கரூர் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்ல, “நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: மேலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை ஆணையம் அமைப்பு: கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நேற்றிரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் விஜய் அங்கிருந்து கிளம்பினார்.

இதற்கிடையே, கரூர் வேலுசாமிபுரத்தில் பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால் இரவு 7.25 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.

அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சைக் கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்கினர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரின் உடல்களும் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. 40-க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளோரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவக் கல்லூரி முன்பு குழுமியுள்ளனர். அவர்கள் கதறி அழுது துடித்ததால் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.

தலைகுனிந்தபடி சென்ற விஜய்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயங்கியதாக தகவல் தெரியவந்ததும், பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்ட விஜய், அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டார். கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விஜயிடம் செய்தியாளர்கள், ‘‘கரூரில் உங்கள் பிரச்சாரத்துக்கு வந்தவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்களே?’’ என கேட்டபோது, எந்த கருத்தும் கூறாமல், தலையைக் குனிந்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாத மரணம், மரணம் விளைவிக்கும் செயல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் என்பன உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0