திருச்சி விமான நிலையத்தில் அத்துமீறிய விஜய் ரசிகர் ; பவுன்சர்கள் கார் விபத்து
திருச்சி விமான நிலையத்தில் அத்துமீறிய விஜய் ரசிகர் ; பவுன்சர்கள் கார் விபத்து
தவெக தலைவர் விஜய் தமது மூன்றாம் கட்ட பிரச்சார பயணத்திற்காக இன்று காலை சென்னை
யிலிருந்து நாமக்கல் செல்ல தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரது விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்ததும், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அப்போது விமான நிலையத்திற்குள் ஒருவர் வேகமாக வந்தார்.
பார்ப்பதற்கு விமான நிலைய ஊழியர் போல் இருந்த அந்த நபரை பார்த்த விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள், அவர் மீது சந்தேகப்பட்டு பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அந்த நபரை சோதனை செய்ததில் விமான நிலைய ஊழியர் என சொல்லப்பட்ட நிலையில், அவர் தனது கழுத்தில் டேக் மட்டுமே போட்டிருந்தார். ஆனால், அதில் ஐடி கார்டு இல்லை. இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரித்தனர்.
அதில், அந்த நபர் விமான நிலைய ஊழியர் இல்லை என்றும், விஜய் ரசிகர் என்பதும், விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான நிலைய ஊழியரை போல் வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரை துப்பாக்கி முனையில் பிடித்த பாதுகாப்பு படை வீரர்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
விஜய் பின்னால் யாரும் செல்ல வேண்டாம், விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரித்தும், அதை பொருட்படுத்தாத தவெகவினர் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் பரப்புரைக்காக செல்லும்போது அவரது பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள் வாகனம் திருச்சி முசிறி சாலையில் திருஈங்கோய்மலை அருகே விபத்தில் சிக்கியது.
முன்னாள் சென்ற காரின் மீது பவுன்சர்கள் பயணித்து சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற பவுன்சர்கள் கார் விபத்தில் சிக்கினாலும், கார் தொடர்ந்து பயணிக்க ஏதுவாக இருந்ததால், மீண்டும் வாகனம் அதே வேகத்தில் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0