போருக்கு முன் சாமி கும்பிடு தேர்தலுக்கு முன் மக்கள் கும்பிடு; திருச்சியில் விஜய்

Sep 13, 2025 - 15:32
Sep 13, 2025 - 15:34
 0  39
போருக்கு முன் சாமி கும்பிடு தேர்தலுக்கு முன் மக்கள் கும்பிடு; திருச்சியில் விஜய்

விஜய்யின் முதல் தேர்தல் பரப்புரை; தொழில்நுட்பக் கோளாறால் 15 நிமிடத்தில் பேச்சை முடித்துக் கொண்ட விஜய்; பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். 2026- ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அதன் முன்னோட்டமாக அரசியல் கட்சியினரின் இதயமாக கருதப்படும் திருச்சியின் இதயமான காந்தி சந்தை மரக்கடை பகுதியில் இருந்து இன்று தனது பிரச்சாரத்தை துவக்கினார். இன்று காலை 9:30 மணிக்கு விமான நிலையம் வந்த விஜய், சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் கடந்து பிரச்சார பாய்ண்டான மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதிக்கு மதியம் 2:30 மணிக்கு வந்தடைந்தார். சரியாக 3:00 மணிக்கு தனது பிரச்சாரத்தை துவக்கிய விஜய்யின் பரப்புரையில் என்ன பேசப்போகிறார்? எதைப் பற்றி பேச உள்ளார்? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் இருந்தது. இந்தநிலையில், கடல் போல் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில், தவெக தலைவர் விஜய் பேசத் துவங்கியபோது மைக் வேலை செய்யாததால் விஜய் கொஞ்சம் டென்ஷன் ஆனார். பின்னர் அவர் பேசியதாவது; திருச்சி எப்போதும் திருப்புமுனை, போருக்கு முன் சாமி கும்பிடு, தேர்தலுக்கு முன் மக்கள் கும்பிடு, பெரியாரும் அண்ணாவும் எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. திருச்சியின் பிரச்சனைகளை முன்னிறுத்து பேசிய விஜய், மேரிஸ் மேம்பாலம், மாநகராட்சியின் பாதாள சாக்கடை பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை முன்னிலைப்படுத்தி பேசினார். சொன்னீர்களே செய்தீர்களா, வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றாத திமுக உங்கள் ஓட்டு என பேசிய போது இல்லை இல்லை என தொண்டர்கள் ஆவேசமாக குரல் கொடுத்தனர். நாமக்கல் கிட்னி திருட்டு தொடர்பாக பேசினார். அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு எனும் வாக்குறுதி என்ன ஆனது என்றார். அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் கொடுப்பதை சொல்லிக்காட்டி அசிங்கப்படுத்துகின்றனர் என்றார். சுமார் 10 மணி நேரம் காத்திருந்த தொண்டர்களை ஏமாற்றியதாகவே விஜயின் பத்து நிமிட பிரச்சாரம் அமைந்திருந்தது. தொண்டர்கள் ஆர்வமிகுதியால் உயர்ந்த கட்டிடங்களிலும் மரங்களிலும் அங்கிருக்கும் விளக்கு தூண்களிலும் ஏறி நின்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கடை பகுதியில் மின்மினியோகம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0