காவிரி பிரச்னையை திசைதிருப்பவே கைது: நான் புறமுதுகிட்டு ஓடுபவன் அல்ல- உதயநிதி 

Aug 5, 2026 - 07:59
 0  17
காவிரி பிரச்னையை திசைதிருப்பவே கைது: நான் புறமுதுகிட்டு ஓடுபவன் அல்ல- உதயநிதி 

காவிரி பிரச்னையை திசைதிருப்பவே கைது: நான் புறமுதுகிட்டு ஓடுபவன் அல்ல- உதயநிதி 

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என்றும், பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் துளியும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க இளைஞரணி செயலாளரும், எதிர் கட்சித் தலைவருமான உதயநிதி மீது 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கான விசாரணைக்காக சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு சென்ற தஞ்சை போலீசார் அவரை கைது செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணை என்ற பெயரில் காலை முதல் அலைக்கழிக்கப்பட்டு மாலை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டார். விடுதலையானதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசியதாவது; தி.மு.க தலைவரின் உத்தரவை ஏற்று, தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று போராட்டம் நடத்தினோம். காவிரி நீரைப் பெற்றுத்தர வக்கில்லாத த.வெ.க அரசு, விவசாயிகளுக்குச் செய்த துரோகங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகள் குறித்து அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

காவிரி நீர் தமிழகத்திற்கு வரவில்லை என்ற உண்மையைப் பேசியதால், இந்தப் பிரச்னை சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என்ற அச்சத்திலும், திமுக போராடியதைத் திசைதிருப்புவதற்காகவுமே என்னை இந்தத் தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. தீவிரவாதியைப் போல 3,000 போலீசாருடன் 400 கி.மீ. தூரம் என்னை அழைத்துச் சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளைக் கேட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நான் யாரையும் தவறாகவோ, இரட்டை அர்த்தத்திலோ (Double Meaning) பேசவில்லை; சிங்கிள் மீனிங்கில்தான் பேசினேன், பேசுவேன். விவசாயிகள் பிரச்சினையையே முழுமையாகப் பேசினேன். ஆனால், நான் பேசாத ஒன்றை ‘கட், காப்பி’ செய்து, ரீல்ஸ் போட்டுத் திரித்து வீடியோவைப் பரப்பியுள்ளனர்.

எனக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் எனது தாயாக, சகோதரியாகவே பார்க்கிறேன். பெண்களைத் தரம் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தமளிக்கிறது. அதேநேரம், தவெகவினர் மீதான பாலியல் புகார்களில் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசின் பொய் வழக்கு, மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. வழக்கு போட்டால் தன்னைப்போல பயந்து ஓடிவிடுவேன் என முதல்வர் விஜய் நினைத்துவிட்டார்.

 இதே திருச்சி விமான நிலையத்தில் புறமுதுகு காட்டி ஓடிய முதல்வரைப் போல நான் ஓடுகாலி அல்ல. இந்த பொய் வழக்கைச் சட்டமுறைப்படி எதிர்கொள்வேன். த.வெ.க ஆட்சியை நான் ஒரு சர்க்கஸ் கூடாரமாகவே பார்க்கிறேன். தி.மு.க பேரவை உறுப்பினர்களைப் பார்த்தால் கைது செய்ய வேண்டும் என இந்த அரசுக்குத் தோன்றுகிறது. ஆனால் அதிமுக உறுப்பினர்களைப் பார்த்தால் சோஃபா கொடுக்கத் தோன்றுகிறது.

என் பேச்சுக்கு விவசாயிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தாங்க முடியாமலே இந்தத் திசைதிருப்பல் நாடகம் நடக்கிறது. என் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான திமுகவினரை தலைவணங்குகிறேன். கைதான அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆட்சியில் தி.மு.க எடுத்த முயற்சியால்தான் காவிரிக்குத் தண்ணீர் வந்தது. இந்த உண்மையை நான் திரும்பத் திரும்பப் பேசுவேன்.

 

இந்த முதல்வருக்கு தமிழ்நாடு வரலாறு, திமுக வரலாறு தெரியவில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நிச்சயம் பதில் தருவார்கள் நாங்கள். நாளை சட்டமன்றம் செல்கிறோம். எங்கள் தலைவர் எங்களுக்கு உரிய அறிவுரையை கூறுவார் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0