வறண்ட காவிரியில் ஆடி18; புதுமணத் தம்பதியினர், பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாடு 

Aug 3, 2026 - 11:48
 0  118
வறண்ட காவிரியில் ஆடி18; புதுமணத் தம்பதியினர், பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாடு 

வறண்ட காவிரியில் ஆடி18; புதுமணத் தம்பதியினர், பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாடு 

தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடும் வைபவம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு எல். நினோ தாக்கம், கர்நாடக அரசு தமிழக மக்களை வஞ்சித்து தண்ணீர் திறந்து விட மறுத்த காரணத்தால் வறண்ட ஆறுகளில் குட்டை போல் தேங்கிய நீரில் பாரம்பரிய மரபுகளை பின்பற்றி படையலிட்டு வழிபாடு செய்தனர் புதுமணத் தம்பதியினர், பொதுமக்கள்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு, அதன்படி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், காவிரி நதி மற்றும் நீர்நிலைகளில் நீர் பெருக்கெடுப்பதை வரவேற்று நன்றி தெரிவித்து ஆடிமாதம் 18ம்தேதி ஆடிப்பெருக்கு தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படும். 

ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து, காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தி, வழிபடுவார்கள். ஆடிப் பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கு அன்று செய்யப்படும் வழிபாடு, தான தர்மங்கள், துவங்கும் செயல்கள் ஆகியவற்றின் பலன்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப் பெருக்கு மிக முக்கியமான நாளாக தமிழகத்தில் கருதப்படுகிறது.

 மங்கல நாளான இன்று புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் புனித நீராடி தாலிப்பெருக்கு எனப்படும் தாலி மாற்றிக்கொள்வது வழக்கம். பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அவல், பச்சரிசி, பழங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து, படையல் இட்டு வணங்கி செல்வது வழக்கம். அதேபோல் கடந்த ஓராண்டில் திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை கொண்டு வந்து, நீர்நிலைகளில் விட்டு காவிரி தாயை வணங்கி செல்வர். அதேபோல் பெண்கள் புதிதாக தாலிக் கயிறு மற்றும் மஞ்சள் கயிறை மாற்றிக்கொண்டு காவிரி தாயை வணங்குவது வழக்கம்.

அதேபோல திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவண் கிடைக்கவேண்டி காவிரித் தாயை வணங்குவதும் இந்நாளில்தான்.

அந்தவகையில் ஆடி-18 நாளான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரிஆற்றின் கரையில் ஆயிரக்கணக்கான புதுமணத்தம்பதியினர் பெற்றோர் உறவினருடன் வருகை தந்திருந்து, காவிரித்தாய்க்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் புதுமணத்தம்பதியினர் தாங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டும், தண்ணீர் இல்லாததால் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில், ஷவரில் புனிதநீராடி பொங்கி வரும் காவிரிபோன்று தங்களது வாழ்வும் பெருகவும், காவிரிபெருக்கெடுத்து ஓடுவதுபோல மகிழ்ச்சி நிலைக்கவும், மாங்கல்யம் நிலைக்கவும், வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலி மாற்றிக்கொண்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையிலும் இந்த ஆண்டு திருச்சி மட்டுமன்றி, நாமக்கல், தஞ்சை, கருர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் காவிரி மற்றும் நீர்நிலைகளில் வழிபாடு செய்து செல்கின்றனர்.

 காவிரி ஆற்றில் தண்ணீர் வறண்டு காணப்பட்ட நிலையிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காவிரி கரைகளில் கூடுவதால் ஸ்ரீரங்கம் அம்மாமண்டம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக, வருடம் தோறும் கரைபுரலும் காவிரி தாய்க்கு சீர் செய்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் வழக்கம். இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் இல்லை என்றாலும் வழக்கம் போல் சீர் செய்யும் நடைமுறைக்காக இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பட்ட ஸ்ரீரங்கநாதர் வழிநெடுக உபயங்கள் கண்டருளி 11:30 மணி அளவில் அம்மா மண்டபம் படித்துறையை வந்தடைந்தார். அங்கு திரையிட்டு, பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்களுக்கு காட்சியளிக்கிறார். இன்று மாலை 5 மணி அளவில் காவிரி தாய்க்கு ரங்கநாதரின் சீர் செய்யும் வைபவம் நடைபெறுவதும், அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காவிரியில் வழிபாடு செய்வதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 0