கர்நாடக முதல்வர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்

Jul 31, 2026 - 15:31
 0  28
கர்நாடக முதல்வர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்

கர்நாடக முதல்வர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுருவாடி கிராமத்தில் பாலைவனமாக மாறிவரும் காவிரி டெல்டாவை பாதுகாக்க கர்நாடகாவிடம் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது; காவிரி டெல்டாவில் 13 லட்சம் ஏக்கர் பாலைவனமாக காட்சியளிக்கிறது. கோடை பருத்தி பயிர்கள் அழிந்து வருகிறது. நிலத்தடி நீர் பறிபோய் ஒட்டு மொத்தமாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

விவசாயிகளும், தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவையை இழந்து விட்டோம். தற்போது சம்பாவும் கேள்விக்குறியாகி விட்டது. இதனால் விவசாயிகளின் தற்கொலைகள் தீவிரமடையுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தியை இழந்து ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் பேராபத்து உள்ளது. 

இந்நிலையில் வினாடிக்கு 3500கன அடி தண்ணீரை கர்நாடகம் பிலிகுண்டுவில் விடுவிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனை நிறைவேற்ற கர்நாடகம் சட்ட விரோதமாக மறுத்துள்ளது. நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்க கர்நாடக முதலமைச்சர் முயற்சி எடுக்கிறார்.

உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்திரவை எதிர்த்து கர்நாடகம் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க முன்வர வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை சீர்குழைக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி கர்நாடகம் செயல்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது.

தமிழகத்தை அழிக்க துடிக்கும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு துணை போக கூடாது. ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். உடனடியாக தண்ணீரைப் பெற்று நிலத்தடி நீரையாவது பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். 

பெண் விவசாயிகள் மாரடித்து போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். விவசாய தொழிலாளர்கள், பெண்கள் வேலைவாய்ப்பை முற்றிலும் இழந்துள்ளனர். உடனடியாக ஆணையும் உத்தரவை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியை கோர வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். சட்ட விரோதமாக மேகதாட்டு அணையை கட்ட அனுமதிக்க கூடாது என்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் கோட்டூர் ஒன்றிய வடக்கு தலைவர் எஸ் வி கே சேகர், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செல்வராஜ், செந்தில்குமார், கண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0