வியட்நாம் படகு விபத்து ; திருச்சி திரும்பிய மூவரின் உடல்கள்
வியட்நாம் படகு விபத்து ; திருச்சி திரும்பிய மூவரின் உடல்கள்
வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். லாவா செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் நேற்று இரவு மும்பை கொண்டுவரப்பட்டு இன்று காலை சென்னை வந்தது. இதில் திருச்சியைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்கள் கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு தற்போது திருச்சிக்கு எடுத்து வரப்படுகிறது.
திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி மற்றும் அழகுராஜன் ஆகியோர் உடல்கள் கோவையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் அரசு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு எடுத்துவரப்பட்டன
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மற்றொரு விமானத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஜெயவேல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருக பிரபு ஆருமுகம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் சுந்தரராஜன் ஆகிய மூன்று பேரில் உடல்கள் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது.
தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். உடல்கள் வந்தடைந்ததும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, உறவினர்களின் முன்னிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
வியட்நாம் படகு விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த அழகுராஜன் உடலை பெற்றுக்கொள்ள அவரது கோவை விமான நிலைய சரக்ககத்திற்கு வந்த அவரது நண்பர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கை திருப்திகரமாக இருந்தது.
மேலும், வறுமையில் உள்ள அழகுராஜனின் குடும்பத்திற்கு நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன் என்றார்.
லாவா நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றிய அழகுராஜன், அந்நிறுவனத்தின் சார்பில் வியட்நாம் சுற்றுலா சென்றபோது இந்த விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0