ஏரி மணல் திட்டில் இளம்பெண் கொடூரக் கொலை; திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
ஏரி மணல் திட்டில் இளம்பெண் கொடூரக் கொலை; திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்துபத்து 10 நாட்களுக்கும் மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த விபரம் வருமாறு ;
சிறுகளப்பூர் கிராமத்தின் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். லாரி ஓட்டுநரான இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி (வயது 32). இவர் தினந்தோறும் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள தனது ஆட்டுப்பட்டிக்குச் சென்று விட்டு, அருகில் உள்ள பெரிய ஏரிப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச் செல்வது வழக்கம்.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு சுமார் 10:00 மணி அளவில் வழக்கம் போல் ஆட்டுப்பட்டிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற செந்தமிழ்செல்வி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் நந்தகுமார், ஆட்டுப்பட்டி மற்றும் ஏரிப் பகுதிகளில் தீவிரமாகத் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால், அன்றைய தினமே இரவு 10:15 மணி அளவில் காணக்கினியநல்லூர் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் தெரிவித்துள்ளார்.
தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது செந்தமிழ்செல்வி ஏரியில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அடுத்த நாள் காலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் ஏரி மற்றும் அருகில் இருந்த நாணல் புதர்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், பெரிய ஏரியின் கரைப்பகுதியில் காணாமல் போன செந்தமிழ்செல்வியின் அலைபேசி, செருப்பு மற்றும் துண்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டதுடன் மணல் திட்டில் நிர்வாண நிலையில் சடலம் மீட்க்கப்பட்டது. அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.
மேலும், அவரது கை, முகம், புருவம், மூக்கின் அருகில் பலத்த காயங்களும், இடுப்பின் பின்புறத்தில் அடிபட்டு இரத்தக் காயங்களும் இருந்தன. இதனால் மர்ம நபர்களால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் செந்தமிழ்செல்வியின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், தடயவியல் அறிவியல் குழுவினர் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் விரைந்து வந்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி (ADSP) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், கொலை நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதால் ஆத்திரமடைந்த சிறுகளப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் திருச்சி சென்னை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
பின்னர், போராட்டக்காரர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர. அப்போது விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இளம் பெண் படுகொலைக்கு நீதி கேட்டு கிராம மக்கள் நடத்திய சாலை மறியலால் திருச்சி சென்னை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெகு நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0