சூசகமாக அறிவித்த விஜய் ; திருச்சி கிழக்குத் தொகுதியில் இவர் தான் தவெக வேட்பாளர்?
சூசகமாக அறிவித்த விஜய் ; திருச்சி கிழக்குத் தொகுதியில் இவர் தான் தவெக வேட்பாளர்?
திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதி என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்பு முதல் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அப்போது முன்னாள் அமைச்சரும், வாரிய தலைவருமான கு.ப.கிருஷ்ணன் மற்றும் அவரது மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
திருச்சி மாவட்ட அரசியலில் முன்னாள் அமைச்சரும், வாரிய தலைவருமான கு. ப.கிருஷ்ணன் குடும்பத்திற்கு பாரம்பரிய செல்வாக்கு உண்டு. அதிமுக ஆட்சியில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றிய கு. ப.கிருஷ்ணன், திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலுவான வாக்கு வங்கியை கொண்டிருந்தார். அவரது மகன் க.சிரஞ்சீவி, கல்வியறிவு மிக்க, இளைஞர்களை ஈர்க்கும் புதிய முகமாக அறியப்படுகிறார்.
தவெக தலைமை ஏற்கனவே "உள்ளூர் செல்வாக்கு + தூய்மையான பின்னணி" கொண்ட வேட்பாளர்களை இடைத்தேர்தல்களில் நிறுத்தும் திட்டத்தை வகுத்துள்ளது. அந்த வகையில், திருச்சி கிழக்கு தொகுதியில் க.சிரஞ்சீவி தவெக வேட்பாளராக இருக்கலாம் என்கிற ஊகங்கள் தீயாகப் பரவி வருகின்றன.
அதற்கு முன்னோட்டமாக தமிழகம் முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஆன விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது அவருக்கு கு.ப.கிருஷ்ணன் மகன் சிரஞ்சீவி செங்கோல் வழங்கினார். முதலமைச்சர் விஜய்யின் கையில் சிரஞ்சீவி வழங்கிய வெள்ளிக் கோல், வெறும் மரியாதை பரிசு மட்டுமல்ல; திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களம் தவெக வசமே இருக்கும் என்பதற்கான அரசியல் சமிக்ஞை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்த நிகழ்வு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது மகன் ஜவஹர் உள்ளிட்டோருக்கும் மேடையில் முக்கியத்துவம் கொடுத்தார் விஜய். ஏற்கனவே திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வெல்லமண்டி நடராஜன். அவரும், அவரது மகன் ஜவகரும் கிழக்குத் தொகுதியில் நன்கு பரிச்சயமானவர்கள். ஆக கிழக்குத் தொகுதியில் குடியிருக்கும் வெல்லமண்டி நடராஜன் தரப்புக்கும் வாய்ப்பு இருக்கலாம் என பேசப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதால், உள்ளூர் செல்வாக்கு மிக்க சிரஞ்சீவி மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவகர் ஆகியோரில் ஒருவர் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என தவெக தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது.
திருச்சி கிழக்கு தொகுதி எப்போதும் என் செல்லப்பிள்ளை மாதிரி, உங்கள் தொகுதியில் உங்களில் ஒருவரே தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுவார் என விஜய் பேசிய நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் மண்ணின் மைந்தனுக்கு தமிழக வெற்றி கழக வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
1
Sad
0
Wow
1