அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் தீக்குளிப்பு: எடப்பாடி தஞ்சை விரைவு 

Jun 1, 2026 - 11:16
 0  41
அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் தீக்குளிப்பு: எடப்பாடி தஞ்சை விரைவு 

அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் தீக்குளிப்பு: எடப்பாடி தஞ்சை விரைவு 

அதிமுகவின் தோல்வி, கட்சியில் ஏற்பட்ட பிளவு என அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் தொண்டர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த திருப்பனந்தாளை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது முடிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டு நேற்று இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்திலும், தஞ்சை மண்டலத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவில் வசித்தவர் மகேந்திரன். இவர் அதிமுக வர்த்தக அணியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். தீவிர அதிமுக விசுவாசியான இவர் அதிமுக தோல்வி, அதனை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை அதிமுக ஒன்றிணைைய வேண்டும், அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது, அடுத்த பிறவியில் அதிமுகவின் எளிய தொண்டனாக பிறக்க வேண்டும், என்னுடன் அரசியலில் பயணித்த தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய கழக செயலாளர், திருப்பனந்தாள் பேரூர் கழக செயலாளருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும். என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும். இறுதி ஆசையாக எனது உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைக்க வேண்டும் என்று கூறி முகநூலில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி உள்ளனர்.

அப்போது திருப்பனந்தாள் அருகே பாலூர் என்ற இடத்தில் ஒருவர் எரிந்து கொண்டிருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீயை அணைத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக எரிந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் தீக்கு இறையானார். இது குறித்து விசாரணை செய்ததில் இறந்தவர் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. உடனடியாக உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் பாரதி மோகன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி திருப்பனந்தாள் வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திருப்பனந்தாள் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, பூக்கடை மகேந்திரனின் இந்த முடிவால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிமுகவின் ராஜ் சத்யன் வெளியிட்ட பதிவில், ”தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி. இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம்” என இரங்கல் தெரிவித்துள்ளார். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0