விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி மனு அளித்த புஸ்லி ஆனந்த்; விடுதி கிடைப்பதில் இழுபறி; கமிஷனர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி மனு அளித்த புஸ்லி ஆனந்த்; விடுதி கிடைப்பதில் இழுபறி; கமிஷனர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற 13 தேதி திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார். அப்பொழுது போலீசார், தொண்டர்களை உள்ளே அனுமதிக்கதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடிகராக, விஜய் மன்றம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் விஜய் தனது மன்றத்தை அரசியல் கட்சியாக கடந்தாண்டு மாற்றி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார்.
தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு சென்ற ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மாநாடு மதுரையில் கடந்த மாதம் 21ந்தேதி கோலாகலமாக, வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டு மாநாடுகளும் வெற்றி பெற்ற நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னம் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
அந்தவகையில், திராவிடக் கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் மாநகராகவும், சென்ட்டிமென்ட்டாக நம்பப்படும் திருச்சி மாநகரில் இருந்து விஜய் தனது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார பயணத்தை செப்டம்பர் 13ஆம் தேதி துவங்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கினர்.
அதன்படி, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி விமான நிலையம் வந்த புஸ்லி ஆனந்த் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய இடங்கள் மற்றும் ரோடு ஷோவுக்கு காவல்துறையிடம் அனுமதி கோரும் மனுவை விமான நிலையம் எதிரேயுள்ள சித்தி விநாயகர் கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நிர்வாகிகளுடன் சென்றார். அங்கு ஆணையர் காமினியை நேரில் சந்தித்து திருச்சி மாநகரத்தில் மரக்கடை, காந்தி மார்க்கெட், பால்பண்ணை, சென்னை புறவழிச்சாலை வரை ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தார்.
ஆனால், ‘திருச்சி மாநகரம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை அடர்த்தியான பகுதி. எனவே யாருக்கும் இங்கு ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி இல்லை’ என்று ஆணையர் தரப்பில் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். அதையடுத்து, சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரினர்.
அதற்கு, ‘திருச்சி மாநகரத்தில் மொத்தம் 45 இடங்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்படும். அதில் சத்திரம் பேருந்து நிலையம் இல்லை’ என்றனர். அதையடுத்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை, சிந்தாமணி அண்ணா சிலை, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கோரி மனு கொடுத்திருக்கின்றனர் தவெகவினர்.
தவெக தலைவர் விஜய் திருச்சியில் 2 நாட்கள் தங்கியிருந்து ஒரு மாவட்டத்திற்கு இரண்டு தொகுதியில் பிரச்சாரம் செய்வதென ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் நெருக்கடி, பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி, விஜய்க்கு திருச்சியில் உள்ள பிரபல ஓட்டல்கள் அறைகள் ஒதுக்க மறுத்துவிட்டன.
இதனால், சென்னையில் இருந்து அதிகாலையில் கிளம்பி திருச்சி வரும் விஜய், மீண்டும் பிரச்சாரத்தை முடித்து இரவு சென்னை திரும்புவற்கு ஏதுவாக பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி செப்.13-ம் தேதி காலை 10.35 மணியளவில் திருச்சிக்கு வருகை தரும் விஜய் மரக்கடை எம்ஜிஆர் சிலை அல்லது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வருகை தரும் விஜய், இங்கிருந்து தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை வரை ஊர்வலமாக வருகிறார்.
அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தொகுதியில் குன்னம் பேருந்து நிலையத்திலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார். அன்றிரவே சென்னைக்கு பிரச்சார வாகனம் மூலம் வீடு திரும்புகிறார். இதேபாணியில், ஒருநாள் விட்டு ஒருநாள் என மொத்தம் 100 நாட்கள் தொடர்ந்து விஜய் பிரச்சாரம் செய்ய விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமிஷனர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு:
திருச்சியில் தேர்தல் பிரச்சார அனுமதி கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவருடன் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளே செல்ல முயன்றதால் போலீஸார்- தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ‘அனைவரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஒரு சிலர் மட்டும் தான் மனு கொடுக்க செல்ல வேண்டும்’ என்று போலீஸார் உறுதியாக தெரிவித்தனர்.
அதையடுத்து, புஸ்ஸி ஆனந்த் உடன் மாவட்டச் செயலாளர் குடமுருட்டி கரிகாலன் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுப்பயணமானது திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெறும் வகையில். திட்டமிடபட்டுள்ளதால்
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் புஸ்ஸி ஆனந்த் சென்று அனுமதி கோரி கடிதம் அளித்தார்.
காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்த புஸ்ஸி ஆனந்த், விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை, சிந்தாமணி அண்ணா சிலை மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு சென்றுள்ளார்.
புஸ்லி ஆனந்துடன் தெற்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் மற்றும் நிர்வாகிகள் அருள், ரவிசங்கர், விக்னேஷ், ஜீவா, மோகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0