திருச்சி மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி; செவிலியர்கள் சாலை மறியல்: அமைச்சர் ரமேஷ் சமாதான பேச்சு

May 23, 2026 - 14:17
 0  107
திருச்சி மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி; செவிலியர்கள் சாலை மறியல்: அமைச்சர் ரமேஷ் சமாதான பேச்சு

திருச்சி மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி; செவிலியர்கள் சாலை மறியல்: அமைச்சர் ரமேஷ் சமாதான பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு - கலைச்செல்வி  இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

இவர்களது மகள் சீதாலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளது. இதற்காக அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறினர். இதனையடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக மயக்கவியல் மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் நினைவு திரும்பாமல் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உறவினரும், செவிலியர்களும் மருத்துவரின் தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி உயிரிழந்ததாக குற்றம் சாட்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் வந்து பேச வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை;

முன்னதாக திருச்சியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் துணை சபாநாயகர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், துணை சபாநாயகர் ரவிக்குமார், அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் எடுத்துரைத்தனர். பயிற்சி செவிலியர் மரணம் குறித்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான குழு திருச்சி அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

மேலும், அமைச்சர் ரமேஷிடம் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அது வேறு பிரச்னை , இது வேறு பிரச்னை சார். எல்லா புகார்களும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதியதாக அமைந்துள்ள அரசு மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொன்றாக சரி செய்ய தொடங்கியுள்ளோம். சற்றே நேரம் கொடுங்கள். மிகத்தரமான மருத்துவ சேவையை அரசு வழங்கும். மக்கள் இவ்வளவு நாளாக எதிர்கொண்ட துயரத்தை எங்களிடம் பகிர்ந்துள்ளனர். அதை சரிசெய்யவே நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். புதிய அரசாங்கம் இப்போது தான் அமைந்துள்ளது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0